Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பல்கலைக் கழகத்தின் கலாச்சாரப் போலிஸ்காரர்களும் நுகர்வுக் கலாசாரமும்

University_of_Jaffnaவன்னி அழிப்புடன் வடக்குக் கிழக்கிலிருந்து போர் ஏற்படுத்திய சமூக ஒழுங்கமைப்பு சிதைந்து போக, அதனை மறுசீரமைப்பதற்கான திட்டங்கள் அற்றுப்போயின. மக்கள் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற ஆழ் மன அச்சத்துடன் வாழ ஆரம்பித்தனர். ஒரு புறத்தில் நுகர்வுக் கலாசாரம் துரித கதியில் அறிமுகப்படுத்தப்பட, மறுபுறத்தில் வறிய மக்கள் கூட்டம் ஒன்று தோன்றியது. புலம்பெயர் நாடுகளிலிருந்து வழங்கப்படும் இலவச பணம் நுகர்வுக் கலாசாரத்தை ஊக்கப்படுத்திற்று.

அதிவேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட தென்னிந்திய சினிமா, மதுபான சாலைகள், தவல் தொழிநுட்பம் பிரசவித்த பாலியல் வக்கிரங்கள் போன்றன சமூகத்தின் பொதுவான கலாசாரத்தை சீரற்ற சிதைவிற்கு உட்படுத்தியது. அறிவியல் உலகத்திலிருந்து முற்றாக அன்னியப்படுத்தப்பட்ட இளைய சமூகம் ஒன்று சமூகத்தில் துருத்திக்கொண்டு தெரிந்தது.

அதனை எதிர்கொள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் தலைமைகள் இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற பிற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள் சமூகத்தை மறுசீரமைப்பதற்கான பணியை அதன் உறுதியான ஆதரவுத் தளமாக அமைந்திருக்கும் யாழ்ப்பாண மேலாதிக்க அதிகாரவர்க்கங்களிடம் விட்டுச் சென்றது.

யுத்தம் சார்ந்த சமூக விழுமியங்களிலிருந்து மீள்வதற்கான காத்திரமான அரசியல் தலைமை இல்லாமை, கலாச்சாரப் போலிஸ்காரர்களை உருவாக்கியுள்ளது. யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து செல்லவேண்டும் என்றும் பெண்கள் சேலை கட்டவேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்தித்து அதனை இப்போது திரும்பப் பெற்றுள்ளது.

புதிதாக அதிகாரம் செலுத்த முயலும் கலாச்சாரக் காவலர்களின் மனோபாவத்திலிருந்தே இவ்வாறான கருத்துக்கள் தோன்றுகின்றன.

ஆண்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இந்து அடிப்படைவாதிகளும் முன்வைக்கும் கட்டுப்பாடுகளுக்கு இணையான யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகத்தின் பழமைவாதச் சிந்தனைக்கு எதிராக எதிர்ப்புக்கள் தோன்றின. மாணவர்கள், மக்கள் பற்றுள்ளவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் எழுப்பிய எதிப்புக் குரலைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அடிபணிந்தது. தனது அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

பல்கலைக் கழகத்தில் மட்டுமன்றி சமூகம் முழுவதுமே பற்றிக்கொண்டுள்ள இந்தப் பழமைவாத நோய் எதிர்கொள்ளப்படுவதும், நுகர்வுக்கலாச்சாரத்திற்கு எதிரான புதிய கலாச்சாரத்தை நோக்கி சமூகம் நகர்த்திச்செல்லப்பட வேண்டியதும் இன்று அவசியமானது.

Exit mobile version