வன்னி இனப்படுகொலையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமாக இது கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தது.
பாராளுமன்றத் தேர்தலை நோக்கமாக முன்வைத்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன் போராட்டத்திலும் பங்குபற்றினர்.
அமெரிக்க ஆதரவோடு அமெரிக்காவின் நலன்களுக்காக முன் மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா குழு மேற்கொண்ட விசாரணைக்கான அறிக்கை இன்று அமெரிக்காவினால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு ஆதரவான நிலை தோன்றும் என்பதே மைத்திரி – ரனில் அரசும் அமெரிக்க அரசும் கூறும் நியாயம்.
ஒரு தேசிய இனத்தின் ஒரு பகுதியை அழித்த கோரம் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு பெருகும் என்ற கொச்சைத்தனமான நியாயத்தை அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை அரசும் முன்வைக்கின்றன.
இது வரைக்கும் அமெரிக்காவின் எடுபிடிகள் போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய அரசியல் வழி முறை எதனையும் முன்வைக்காமல், சுய விமர்சனமின்றி மக்கள் மத்தியில் நிர்வாணமாக நின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாகவிருந்தது.
ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்றவற்றின் உண்மையான கோர முகத்தை மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றையே மேலும் நம்பக் கோரும் இனவாத அரசியலை முன்வைக்கும் கஜேந்திர குமார் குழுவினர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்ப முயன்றனர்.
10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான போராட்டம், பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. சிங்கள மாணவர்களும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டமை புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்து. ஐ.நாவிடம் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத குருக்ககள் ஊடாக ஐ.நாவிடம் சேர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டது.
இராணுவம், போலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.