அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கள் சார்ந்ததல்ல என்பதை சில முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகக் கூறிவந்த போதும், மக்கள் நேரடியாகவே அதனை உணர்ந்துகொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் கூட புலம்பெயர் நாடுகளில் இதுவரை அமெரிக்க அறிக்கைக்கு எதிரான அடையாளப் போராட்டங்கள் கூட நடைபெறவில்லை என்பது மக்களின் விரக்தியக் காட்டுகின்றது.
ஐ.நா அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கூறப்படிருந்தாலும், அவற்றின் சூத்திரதாரிகள் சுட்டிக்காட்டப்படவில்லை. அடிப்படையில் போர்க்குற்றவாளிகள் என்று கருதப்படும் எவரும் உலகின் எந்தப்பகுதியிலும் அச்சமின்றி உலா வருவதற்கான வாய்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் கொலையாளிகள் மக்கள் மத்தியில் நடமாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எது எவ்வாறாயினும் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு புலத்திலுள்ள தமிழர்களை நோக்கு நகர்த்தப்படும் நிலை தீர்மானத்தின் பின்னர் காணப்படும். தவிர ஏகாதிபத்தியங்கள் தொடர்பாக தமிழர்கள் நேரடியான புரிதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.