Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பம் : போலி நம்பிக்கைகள்

unhrcஇலங்கை பேரினவாத அரசின் இனப்படுகொலையை போர்க்குற்றம் என்ற எல்லைக்குள் குறுக்கி ஐ.நாவிடம் ஒப்ப்டைத்து ‘நல்லாட்சி’ என்ற தலையங்கத்துடன் புதிய பேரினவாதிகளை ஆட்சியில் அமர்த்திய அதே தமிழினவாதிகள் மீண்டும் ஐ.நாவை நோக்கி தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்கா இன்றைய இலங்கை அரசை தனது நம்பிக்கைக்குரிய நல்லாட்சி அரசு என அழைத்துக்கொள்ள, அமெரிக்காவின் தனிச் சொத்தான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தமிழ் வியாபார ஊடகங்களில் பிரதான பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்துள்ளது.

12/09/2016 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்த அமர்வில் பலவந்தமான அல்லது தன்னிச்சையான காணாமல்போதல்கள் பற்றிய ஐ.நா செயற்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேற்படி அமர்வின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமல்போதல் பற்றிய ஐ.நா செயற்குழுவின் இலங்கை பயணம் தொடர்பான அறிக்கையும் ஐநா சபையில் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கும் இச் செய்திகளின் பின்னணியில் இலங்கையில் எந்த மாற்றமும் நடைபெறப் போவதில்லை. இன்றைய இலங்கை அரசு வட கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களையும், முஸ்லீம்களையும் மலையக மக்களையும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் ஒடுக்கிவருகிறது. இலங்கை அரசின் பல்தேசிய வர்த்தக நிறுவனம் சார்ந்த கொள்கைத் திட்டங்கள் சிங்கள மக்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆக, இலங்கை அரசிற்கு எதிரான, சுய நிர்ணைய உரிமைக்கு ஆதரவான பெரும்பான்மையை ஓரணியின் கீழ் கொண்டுவருவதும், அரசைப் பலவீனப்படுத்துவதும் சாத்தியமான ஒன்றே.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் சார்ந்த சர்வதேச ஜனநாயக முற்போக்கு அணிகளின் கண்காணிப்பு உறுப்பு ஒன்றின் ஊடாக இலங்கை அரசிற்கு எதிரான இனப்படுகொலை விசாரணை சாத்தியமான ஒன்றே.

Exit mobile version