Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெளி நாட்டு மாணவர்களுக்கு இயற்கை விஞ்ஞானம் கற்க பிரித்தானியாவில் தடை

foreign-studentsகுறித்த சில இயற்கை விஞ்ஞானப் பாடங்களை பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கற்பதற்கு நூற்றுக்கணக்கான வெளி நாட்டு மாணவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய வெளி நாட்டு மாணவர்கள், அணுசக்தி, உயிரியல், இரசாயனம் போன்ற கற்கை நெறிகளை பல்கலைக் கழகங்களில் கற்பதற்கு பிரித்தானிய அரசு தடைவிதித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சனியன்று வெளியான இன்ட்டிபென்டன்ட் வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 739 மாணவர்களுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமது நாடுகளில் அழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு கற்கை பயன்படலாம் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் மாணவர்களை ‘தொழில் நுட்பக் கற்கை ஒப்புதல் திட்டம்’ Academic Technology Approval Scheme (ATAS) என்ற திட்டத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்குமாறு பல்கலைக் கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி என்பது பல மில்லியன்கள் புரளும் வியாபாரம் என்பதால் சர்வதேச மாணவர்களின் தொகை குறைவடைய வாய்ப்புள்ளது என பல்கலைக் கழகங்கள் சில கவலை தெரிவித்தன.

நாடுகளையும் அவற்றின் அறிவியல் வளர்ச்சியையும் கேள்விக்குள்ளாக்கும் நிறவாத அடிப்படையிலான திட்டம் எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும்.
வறிய மூன்றாமுலக நாடுகளில் இலவசக் கல்வியை அழிக்கும் திட்டத்தை உலக வங்கியும், உலக நாணய நிதியமும்(IMF) நிறைவேற்றி வருகின்றன. அவ்வாறு இலவசக் கல்வி அழிக்கப்பட்டதும், ஐரோப்பிய அமெரிக்க மற்றும் உள்ளூர்த் தனியார் பல்கலைக் கழகங்கள் அவற்றைப் பிரதியிடுகின்றன. தரமற்ற மட்டுபடுத்தப்பட்ட வியாபாரக் கல்வியை வழங்கும் இந்த நிறுவனங்கள் உள்ளூர் அறிவியலை அழிக்கின்றன. அவற்றை பிரித்தானியா போன்ற நாடுகளில் மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலை திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்படுகின்றது.

பின்னதாக பிரித்தானியாவில் வெளி நாட்டு மாணவர்களுக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுகின்றது.

மூன்றாமுலக நாடுகளில் புற்று நோயை உருவாக்கும் கிருமி நாசினிகளும் களைக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு நாடுகளிலிருந்து இறகுமதி செய்யப்படும் இவை நஞ்சு கலந்த உணவுப் பொருட்களை உருவாக்குகின்றன. இதனால் மனிதர்கள் இளமையிலேயே புற்று நோய் போன்ற வியாதிகளால் மரணித்துப் போகின்றனர். இனி வரும் காலங்களில் இக் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறும் விஞ்ஞானிகளை கிரிமினல்களாகப் பிரகடனப்படுத்தவும், உயிரியல், விவசாயம் போன்ற அறிவைப் பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கவும் மேற்கு ஏகாதிபத்திய அர்சுகள் தயங்கமாட்டா.

இவ்வாறு அனைத்துத் துறைகளுக்கும் வேறுபட்ட காரணங்களுக்காகத் தடை விதிக்கலாம். அறிவைப் பெற்றுக்கொள்ளக் கூடத் தடைவிதிக்கும் சர்வாதிகாரத்தை இந்த நாடுகள் ஜனநாயகம் என அழைத்துக்கொள்கின்றன.

Exit mobile version