வட்டபொத்த தோட்ட முகாமையாளர் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது என அறிவித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சம்பளம் வழங்க மறுக்கப்பட்டு தீபாவளி முற்பணத்தை மட்டும் வழங்க முற்பட்டபோது தோட்டத் தொழிலாளர்கள் அதனை வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அத்தோட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிக்கும் தொழில் உரிமை மீறலுக்கும் உட்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் பிள்ளைகள் உறவுகளுடன் கொண்டாடும் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை கொண்டாடமுடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மாத சம்பளம் 03 நாட்கள் பிந்தியே வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாகவும் தீபாவளி முற்பணம் அல்லது சம்பளமே வழங்கப்படும் என அறிவித்திருந்தமையும் கூட்டு ஒப்பந்தத்திற்கும் பொது தொழில் சட்டத்திற்கம் முறனானது என்பதை சுட்டிக்காட்டு தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்குபடி கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தொழில் உறவு உத்தியோகத்தர் எம்.புண்ணியசீலன் குறிப்பிட்டார்.
தொழில் ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமையினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உரிமை மீறல் காரணமாக வட்டாபொத்த தொழிலாளர்கள் தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்வதில் பிடிப்பின்றியே உள்ளனர். அகலவத்தை பெருந்தோட்டக் கம்பனி தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைகளை மீறி வருகின்ற போதும் அது தொடர்பாக தொழில் திணைக்களம் மௌனமாகவே இருந்து வருவதுடன் அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் தொழிற்சங்க தலைமைகளும் மக்களை மறந்தவர்களாக இருந்து வருகின்றனர்.