Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சந்தேகத்திற்குரிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றுக் கோசங்கள்

gajanபுலம் பெயர் தமிழ் அமைப்புக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலிருந்து இயங்கும் கட்சிகளில் ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அதன் துணை அமைப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பிரதானமானது. கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அரசியலுக்குத் தீனி போடும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எந்தக் குறிப்பான வேலைத்திட்டங்களும் இன்றி உணர்ச்சியூட்டும் சுலோகங்களே கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.

புலம்பெயர் தமிழர்கள் – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) – தென்னிந்திய தமிழ் உணர்வாளர்கள் என்ற மும்முனைக் கூட்டை மையமாக வைத்து இயங்கும் கட்சி இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதனால் மலையக, முஸ்லீம் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரித்து மாபெரும் அழிவின் பின்னரும் இனவாதத்தை உமிழ்ந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரின் பின்னால் ஒளிந்துகொண்டு இனவாதம் பேசும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உணர்ச்சிகரமாக முன்வைக்கும் தீர்மானங்களையும், கோசங்களையும் அடைவதற்கான வேலைத் திட்டத்தை எப்போதும் போலவே இக் கூட்டத்திலும் முன்வைகவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறைகூறும் இக் கட்சி தனது இலக்கை அடைவதற்காக குறைந்த பட்ச வேலைத்திட்டத்தையாவது முன்வைப்பதற்குப் பதிலாக வெற்றுச் சுலோகங்களையே முன்வைத்தது. மக்களை உணர்ச்சிவயப்படுத்தி அதனை வாக்குகளாகத் திரட்டுவதற்கும், புலம்பெயர் நாடுகளில் பிழைப்புவாத அரசியல் நடத்துவதற்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வேலைத்திட்டமற்ற வெற்றுச் சுலோகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

சுய நிர்ணைய உரிமையே தனது இலக்கு என ஆரம்பம் முதல் கூறும் இக் கட்சி அதனை அடைவதற்கான வழிமுறையை இதுவரை முன்வைக்கவில்லை. இலக்கை நோக்கி மக்களை அணிதிரட்டுவது எப்படி, அதற்கான அவர்களின் திட்டம் என்ன என்பது போன்ற குறைந்தபட்சத் திட்டங்களைக் கூட கட்சி ஆராயவில்லை. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் அதன் துணை அமைப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும், காரைநகர், வேரப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருமான திரு சிவகுரு இளங்கோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஐh அவர்களும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகச் சுடரினை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி புவனேசசிங்கம் சரஸ்வதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அடுத்த நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. தமிழ்த் தாய்வாழ்த்தினை யாழ் வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி மாணவிகளான செல்வி பாஸ்கரன் றித்திகா மற்றும் இரத்தினேஸ்வரன் யஸ்மியா ஆகியோர் பாடினர்.
சிறப்புரை ஆற்றியவர்கள்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்
தர்மலிங்கம் சுரேஸ்: மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
இ.எ.ஆனந்தராஜா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும்
வவுனியா மாவட்டம் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார்:
திருமதி விவேகானந்தன் இந்திராணி முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக
இராஜகோன் ஹரிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்.
விஸ்வலிங்கம் திருக்குமரன் சட்டத்தரணி

நன்றியுரை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன்

மேற்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்திய வருடாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானங்கள்
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரு நாடு என்ற எமது கொள்கையை அடைய எமது கட்சியை கிராமம் தோறும் கட்டமைப்புக்களை நிறுவி புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட, கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கின்ற பாரிய இன அழிப்புக்கு எதிராக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தக்கோரி எமது செயற்பாடுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரியளவில் முன்னெடுப்போம்

காணமால் போனவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், நில அபகரிப்புக்கு எதிராகவும் பன்முகப்படுத்தப்பட்ட போரட்டங்களை முன்னெடுப்போம்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய பேரவையை நிறுவி தமிழ் மக்களை நிர்வாகிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

போரினால் பாதிக்கப்பட்ட அவயங்களை இழந்த எமது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கான பொருளாதார கொள்கையை வகுத்து செயற்படுவோம்.

எமது தேசததிற்கான கல்விக்கொள்கை, விளையாட்டுக்கொள்கை, கலைபண்பாட்டுக்கொள்கை சுகாதரக்கொள்கை என்பவற்றை உருவாக்கி முன்னெடுப்போம்.
நன்றி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
28-02-2015

Exit mobile version