அதேவேளை இலங்கை அரசின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கைதிகளைச் சென்று பார்வையிடார்.
இலங்கை அரசு விடுதலை செய்வதற்காகக் கோரியுள்ள கால எல்லையைக் குறைப்பதில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கையின் ஒரு பகுதியை சிறைகளில் அழித்துக் கொண்ட கைதிகள் சார்பாக மக்களை அணிதிரட்டிப் போராட்டம் நடத்துவதற்கும், சிங்கள மக்களுக்குப் பேரினவாதத்தின் கோரத்தைப் பிரச்சாரம் செய்வதற்குமான சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
இலங்கை அரசு சட்டவிரோதமாகத் தடுத்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான கால எல்லையை நிர்ணயிப்பது என்பதை தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய நன்கொடை போன்ற விம்பத்தை கூட்டமைப்பு ஏற்படுத்த முயல்கின்றது.
தனது சட்டங்களுக்கே முரணான வகையில் அப்பாவிகளைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் இலங்கை அரசைத் தண்டிப்பதும், கைதிகளை கால எல்லையின்றி விடுதலை செய்வதும், அவர்களின் வாழ்க்கையை அழித்தமைக்காக நட்ட ஈடு வழங்குவதும் அடிப்படை ஜனநாயகச் செயற்பாடகும்.
எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தனும், அவரின் முன்முகமான சுமந்திரனும் இவற்றில் எதையும் கோரவில்லை. இங்கு குற்றவாளிக் கூண்டிலிருக்கும் இலங்கை அரசைப் பாதுகாக்கும் முயற்சியிலேயே சம்பந்தன் குழு ஈடுபட்டுள்ளது.
கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் அவர்கள் மீதான நடவடிக்கைகள், மிரட்டல்கள், சித்திரவதைகள் குறித்த எந்த உத்தரவாதத்தையும் கூட்டமைப்புப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.