தமிழ் நாடு எங்கும் ‘மூடு டாஸ் மார்க்கை மூடு’ என்ற பாடலை தமிழ் நாட்டின் தெருவெங்கும் பாடினார். மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவனின் கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொண்டது, மக்கள் கோவனின் பின்னால் அணிதிரள ஆரம்பித்தனர். தமிழக அரசால் மக்கள் குடியிருப்புக்களில் திறந்துவைக்கப்பட்டுள்ள சாராயக் கடைகளான டாஸ் மார்க்கை மூடுமாறு மக்கள் ஏக குரலில் ஒலிக்க ஆரம்பித்தனர்.
அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் நாடு அரசு தமது போலிஸ் குண்டர்படைகளை அனுப்பி கோவனைக் கடத்திச் சென்றது.
கோவன் கடத்தப்பட்ட மறுநாளே தமிழ் நாடு முழுவதும் கோவனை விடுதலை செய்யக் கோரி போராட்டங்கள் வெடித்தன. சமூக ஆரவலர்கள், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள் என்ற அனைத்துத் தரப்பிலும் கோவனின் கைதிற்கு எதிராக குரல்கள் எழுந்தன.
ஒரே இரவிற்குள் கோவன் இந்தியா முழுவதும் அறியப்பட்டவராகிவிட்டார். லண்டனிலும் கோவனை விடுதலை செய்யக்கோரி போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதனை எதிர்கொள்ள ஜெயலலிதா மாபியா அரசு தீட்டிய சதித்திட்டத்தின் அடிப்படையில் நேற்று கோவனைப் போலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கோவனின் வழக்குரைஞர் கோவன் மீது போலிப் பயங்கரவாதக் குற்றச்சாட்டை சுமத்துவதற்காகவே கோவன் போலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகவழியில் போராடிய பாடகன் மீது தீவிரவாதக் குற்றம் சுமத்த முனையும் தமிழ் நாடு அரசு எதிர்விளைவுகள் குறித்துச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
கோவன் மட்டுமல்ல கோவனின் பின்னால் அணிதிரண்ட மக்கள் அனைவரும் தமது அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்வதை உணர ஆரம்பிப்பார்கள். தாம் தமது உரிமைகளுக்காக இனிமேல் ஜனநாயக வழிகளில் போராட முடியாது என மக்களும், மக்கள் மீது அக்கறைகொண்ட தலைவர்களும் முடிவிற்குவரவேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறான ஒரு சூழலிலேயே மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சாராய வியாபாரிகளுக்கு எதிராக மக்கள் சார்ந்து போராடிய கோவனைப் பயங்கரவாதியாக்குவதன் ஊடாக ஜெயலலிதா அரசு தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. மக்களை ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று நம்புமாறு கோருகிறது.
போலீஸ் ஒடுக்குமுறைக்கு அஞ்சாது நிறுத்தாமல் பாடும் கோவனின் போர்க்குணம்: