போராட்டம் வெற்றி பெற்றமைக்கான காரணத்தை அதனைத் தலைமை தாங்கிய பெண் கூறியிருக்கிறார். அவர் தனது செய்தியில், எமக்கு அனைத்து உதவிகளைவும் ஆதரவையும் வழங்கிய தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கு நன்றி தெரிவித்தார். வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கையின் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் கவனத்தை ஈர்த்த இப் போராட்டம் இலங்கை அரசிற்குச் சவாலாக அமைந்திருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களின் பலத்தைப் பெற்றுக்கொண்ட போதே இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்தது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்ட நிலையில், பிரித்தானியா அமெரிக்கா போன்ற ஏகபோக நாடுகள் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மக்களைக் கோரி இன்று வரை மக்கள் போராட்டங்கள் தோன்றுவதற்குத் தடையாக அமைந்தன. இந்த அமைப்புக்களின் புறத் தூண்டுதலின்றி மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தில் இனவாதம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கவிடமும், ஐ.நாவிடமும் முறையிடுவோம் என்ற போலி முழக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. இதனால் ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களைச் சார்ந்த மக்களும் போராட்டத்தோடு இணைந்துகொண்டனர்.
இதுவரை தோல்வியை மட்டுமே தமது போராட்டங்களின் விளைபலனாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் கொல்லைபுறத்தை வலம்வந்துகொண்டிருக்கின்றன.
2009 வன்னிப் படுகொலைக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளிலுள்ள அரசியல் குழுக்கள் அந்த நாடுகளின் உளவுத்துறைகளின் ஒட்டுக்குழுக்கள் போன்று செயற்பட்டு ஏற்படுத்திய அழிவுகளுக்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டிய சூழல் தோன்றியுள்ளது.
இலங்கைக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் பிரித்தானிய அரசு கோரிக்கை விடுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள் தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு தமது அரசியல் வழிமுறையை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை. இன்று புலம்பெயர் அமைப்புக்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியை கேப்பாப் புலவு சிறுவனிடம் விட்டுவிடலாம்.