Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்துப் பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் கிளைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும்!

shivsenaஈழத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பிற்போக்குச் சிந்தனை கொண்ட பின் தங்கிய சமூகமாகவே தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. பொதுவாக உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் போராடும் சக்திகள் மத்தியிலும் நம்பிக்கைக்குரிய சமூகமாக 70 களின் முன்னர் அறியப்பட்டிருந்த யாழ்ப்பாண சமூகத்தின் தேசியப் பிரச்சனையைப் தமிழரசுக் கட்சி போன்ற பின் தங்கிய சிந்தனை கொண்ட தலைமைகள் கையாள ஆரம்பித்த நாளிலிருந்து அது பின்னடைவையே சந்தித்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது உலகின் மிக முக்கிய அவலமாகக் கருதப்பட்டது. அவ்வேளையில் கூட சர்வதேச ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டு, கொலைகாரர்களிடமே அழிவிற்கான நீதிவழங்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படுவதற்கு பின் தங்கிய சிந்தனைக்குள்ளேயே பேணப்பட்ட யாழ்ப்பாண சமூகத்தின் பொது மனோ நிலையும் காரணமாகியது.

இன்று வெற்றிடமாகியுள்ள அரசியல் தலைமையை விக்னேஸ்வரன் போன்ற கடைந்தெடுத்த கொழும்பு மேட்டுக்குடி பிற்போக்குவாதிகள், புலம்பெயர் வியாபாரிகளின் துணையுடன் பிரதியீடு செய்துகொண்டிருக்கும் அவலமான சூழலில், இந்துத்துவ மத வெறியர்கள் உள் நுளைய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் பார்ப்பனிய  ஆதிக்கத்தையும், சாதீய வெறியையும், சமூகத்தின் பின் தங்கிய ஒடுக்குமுறை வடிவங்களையும் பிரயோகிக்கும் கிரிமினல் அமைப்பான சிவசேனா இந்துமதப் பாதுகாப்பு என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., கோவாவை மையமாகக் கொண்ட ஹிந்து ஜனா ஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே தங்களது இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது என்று அதன் அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் கூறியுள்ளார். அதன் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையிலும், வவுனியாவிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இந்து மதவெறி அமைப்பான சிவசேனா மற்றொரு அபாயக் குறியீடு. இணையங்களிலும், சமூக வலைத் தளங்களிலும், புலம்பெயர் தேசிய வியாபாரிகளின் செல்வாக்கைப் பெற்றுள்ள இந்த அமைப்பு இனி வரும் காலங்களில் அழிவுகளைத் தீவிரப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படலாம்.

வன்னி இனப்படுகொலைக்கு சற்றுப் பிந்திய காலத்திலேயே இதற்கான முன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன எனலாம். 2012 இல், கேரளாவில் நடைபெற்ற சிவசேனாவின் யாத்திரை ஒன்றை மட்டக்களப்பிலிருந்து சென்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா என்ற இந்து வெறி பயங்கரவாத அமைப்பு ஹிட்லர், முசோலினி போன்ற இனக்கொலையாளிகள் தம்மை ஆளுமை செய்கின்றனர் என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே காலனீயத்திற்குப் பிந்திய காலத்தில் புதிப்பிக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறுஆதிக்கசாதி கலாச்சாரக் கொலைகள், இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த அமைப்பிற்கு நேரடித்தொடர்பிருக்கிறது.

இன்றைய பாரதீய ஜனதா இந்துவெறிக் கட்சியின் ஆதரவுடன் இயங்கும் இந்திய சிவசேனா, இலங்கையில் இந்திய அரசின் சீரழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஆரம்பிக்கப்படுகிறது என்பதில் பெரிய அளவிலான சந்தேகங்கள் இருக்கமுடியாது.

Exit mobile version