Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இணையங்களின் துணையோடு இலங்கை அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் துணை போகின்றனர்!

ariyenthiranஇலங்கைப் பேரினவாத அரசாங்கம் அனைத்துச் சிறுபான்மைத் தேசிய இனங்களையும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்திவருகிறது. அவர்களின் கலாச்சாரக் குறியீடுகள் மீதும், பொருளாதரத்தின் மீதும், பிரதேசங்களின் மீதும் திட்டமிட்ட தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்திவருகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களான மலையக முஸ்லீம் மற்றும் வட-கிழக்குத் தமிழர்களிடையே பேரினவாத அரசாங்கத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டப் பொறிமுறையொன்று அவசியமாகிறது.

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் வேற்றுமைகளுக்கு இடையேயான ஒற்றுமையை ஏற்படுத்துவதும் போராடுவதும் அதனூடாக இலங்கைப் பேரினவாத அரசையும் கருத்தியலையும் பலவீனப்படுத்துவதும் இன்றைய அவசியத் தேவை.

அந்த அடிப்படையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு இடையேயான விட்டுக்கொடுப்பும், கருத்துப் பரிமாற்றமும், இணைவும் அவசியமானது.
இன்றைய இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான இலங்கைப் பேரினவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அவர்களது வர்த்தக நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது. பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு மீண்டும் உயிர்பெறுகிறது.

இவ்வாறான சூழலில் தமிழ் வாக்குப் பொறுக்கி அரசியல் வாதிகள் தமது சுயலாபத்திற்காக தேசிய இனங்களிடையேயான பிளவுகளை ஆழப்படுத்தும் நச்சுக் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அரியேந்திரன் இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாம் மத மாற்றத்திற்கு இந்துக்கள் உட்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகமாகப் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள் என்று தனது குற்றம் சுமத்தும் அரியேந்திரன் தமிழ்ப்பேசும் மக்கள் மீது இவ்வாறான குற்றத்தை பேரினவாதிகள் சுமத்தியிருந்தனர் என்பதை மறந்துவிடுகிறார்.

ஐரோப்பிய நாடுகளில் நிறவாதிகள் கூட வெளி நாட்டுக் குடியேறிகள் அதிகமாக இனப்பெருக்கம் செய்துகொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர்.
இஸ்லாமியர்களும், தமிழர்களும் தவறிழைத்திருக்கலாம் ஆனால் இந்த இரு பகுதியினருக்கும் இடையே இலங்கை அரசிற்கு எதிரான ஒருங்கு புள்ளி ஒன்றில் இணைவது இரண்டு தரப்பினதும் எதிர்கால நலனுக்கே உகந்தது.

இவ்வகையான குற்றச்சாட்டு இந்தியாவில் பாரதீய ஜனதா போன்ற அடிப்படைவாதக் கட்சிகளும், பொதுபல சேனா போன்ற மதவாதப் பயங்கரவாதிகளாலும் முன்வைக்கப்டுகின்றது. கிழக்கில் வறுமையைப் பயன்படுத்தி ஆங்காங்கு நடைபெறும் மதமாற்ற நடவடிக்கையை முன்னிலைப் படுத்தி தமிழினம் அழிகிறது என்று தனது வாக்குகளுக்காக அரியேந்திரன் அழுதுவடிக்கிறார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான குறைந்தபட்ச ஒற்றுமைக்கான அரசியல் திட்டம் ஒன்று வாக்குப் பொறுக்கிகள் முன்வைக்கவில்லை. முஸ்லீம் மக்களுடைய தனித்துவதை மதித்து அவர்களை இலங்கை அரசிற்கு எதிரான அரசியலில் இணைத்துக்கொள்வதற்கு பதிலாக தமது வாக்குகளுக்காக இனவாதத்தை உமிழும் இணையங்களும், அரசியல்வாதிகளும் இலங்கை அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் துணைசெல்வது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

Exit mobile version