காலனியத்திற்குப் பிந்திய காலம் முழுவதும் சிங்கள பௌத்தமே இலங்கை என்ற சிறிய தீவை இரத்ததுளி போன்று மாற்றியுள்ளது. இலங்கை அரச அதிகாரத்தைக் கையகப்படுத்திய அத்தனை அரசுகளும் பேரினவாத மனோ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த எந்த அரசியல் திட்டத்தையும் முன்வைத்ததில்லை மாறாக அதனை வளர்த்தெடுப்பதில் மட்டுமே பங்காற்றியிருக்கின்றன.
நீல் வோட்டா என்ற ஆய்வாளர் கூறுவது போன்று, சிங்கள பௌத்தர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கை என்பது பௌத்தர்களின் புனித நிலம் எனக் கருதுகிறார்கள். அங்கு ஜனநாயகம் எனக் கருதப்படுவது, பௌத்ததிற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அதனை விரிவாக்குவதற்குத் துணை செல்லும் வகையிலும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்ந்துவிட்டு போகலாம் என்பதே.
சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிங்கள பௌத்தத்தின் விரிவாக்கத்திற்கு தடையாக இல்லாமலிருப்பதையே இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்துவரும் நல்லிணக்கம் எனக் கருதுகிறது. அந்த விரிவாக்கத்துடன் முரண்பட்டுக்கொள்ளாமலிருப்பதையே உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் மக்களை நம்பக் கோருகின்றனர். அது ஒற்றையாட்சிக்குள் சுய நிர்ணைய உரிமை, சமஷ்டி என்ற கேலிக்கூத்தான கருத்துக்களாக வெளிவருகின்றன.
இந்த நிலையில் பௌத்தத்தின் உண்மை முகம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் துறவிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்காத துணிச்சலான கோரிக்கையை மனோ கணேசன் முன்வைத்திருக்கிறார்.
இங்கு நிலைமை அதுவல்ல, மனோ கணேசன் கூறுவதற்கு மாறாக மட்டக்களப்பின் மங்களராம விகாரையின் பொறுப்பதிகாரியான அப் பௌத்த துறவி போன்ற பௌத்த வன்முறையே இலங்கையில் பௌத்தத்தைப் பாதுகாத்துவருகிறது.
1915 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து 1983 நடைபெற்ற இனப்படுகொலைகள் ஈறாக வன்னிப் படுகொலைகள் வரைக்கும் பௌத்த துறவிகள் வன்முறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் அரணாகச் செயற்பட்டுள்ளார்கள்.
ஆக, இலங்கையில் பின்பற்றப்படுகின்ற பௌத்தம் வன்முறை இழையோடும் பேரினவாத அரசியலின் கோட்பாடு.
நமது கண்முன்னே பொதுபல சேனா இஸ்லாமியர்களின் முற்றத்தில் நுளைந்து வன்முறையிலும் சூறையாடலிலும் ஈடுபட்டுவிட்டு நல்லாட்சி அரசின் கொல்லைப்புறத்தில் பாதுகாப்புத் தேடிக்கொண்ட போது மட்டக்களப்பு பௌத்த காட்டுமிராண்டி மட்டும் தண்டிக்கப்படுவார் என மனோகணேசன் கூறுவது ஏற்புடையதல்ல. இது துறவியை அவரது அரசு சிறைப்பிடிக்காவிட்டால அவர் தனது அமைச்சர் பதவியைத் துறந்து அதிகாரத் துறவியாகிவிடுவாரானால் அவருக்கு வரலாற்றில் இடமுண்டு.
மாகா வம்சம் என்ற கட்டுக்கதையை பிரித்தானிய காலனியாட்சி சிங்களத்தில் மொழியாக்கம் செய்து கம் சபாக்கள் ஊடாக இலங்கையின் பௌத்த கிராமங்கள் தோறும் பரப்பிய போது அந்த நாட்டை எப்படிச் சூறையாடுவது என நன்கு கற்றுத் தேர்ந்திருந்தது. கேணல் ஒல்கோட் மற்றும் மடம் பிளவாற்ஸ்கி என்ற இரண்டு பாசிஸ்டுகள் இலங்கையில் பௌத்த பாடசாலைகளை நிறுவுவதற்கு அனுமதியும் ஆதரவும் வழங்கிய போது பிரித்தானிய காலனி அரசு இலங்கையின் எதிர்காலத்தை அளவிட்டு வைத்திருந்தது. டேவிட் ஹே விதாரண என்ற கிறீஸ்தவரை இந்தியாவிற்கு அழைத்து சிங்கள பௌத்த பாசிஸ்டாக மாற்றி இலங்கை சிங்கள பௌத்தத்தை உருவாக்கிய போது தனது காலனீய நோக்கங்களுக்கு அத்திவாரமிட்டுச் சென்றது.
இன்று சிங்கள அதிகாரவர்க்கம் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள பிரித்தானியர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.
சிங்கள பௌத்தத்திற்கு எதிரான தமிழர்கள் போராட்டம் என்பது அதனை வளர்ப்பதல்ல. இன்று சிங்கள பௌத்தப் பேரினவாதமும் அடிப்படை வாதமும் மேலெழும் போதெல்லாம், சிங்களவனை வெட்டுவோம் என்ற கணக்கில் தமிழ் பிழைப்புவாத அரசியல் தலைமைகள் பேச ஆரம்பித்துவிடுகின்றன. பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தியாவது தக்கவைத்துக்கொள்ள இவர்கள் எடுக்கும் முயற்சி சிங்களப் பேசினவாதிகளை மேலும் பலப்படுத்துகிறது.
ஆக, பேரினவாதிகளால் சிங்கள பௌத்த நச்சூட்டப்பட்டிருக்கும் அப்பாவி சிங்கள மக்களையும் அரசிற்கு எதிராகத் திசைதிருப்புவதன் ஊடாகவே அரசையும் அதன் வாக்கு வங்கியையும் பலவீனப்படுத்த முடியும்.
பொறுப்பற்ற இணைய மற்றும் அச்சு ஊடகங்கள், அரசியல் பிழைப்புவாதிகள் போன்ற அனைத்தையும் எதிர்கொண்டு மக்கள் இனவாதமற்ற சுய நிர்ணையை உரிமைக்கான போராட்டத்தில் அணிதிரட்டப்படுவதும், அது சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என சிங்கள மக்கள் உணர்ந்துகொள்வதற்கான அரசியல் பொறிமுறை முன்வைக்கப்படுவதுமே நல்லிணக்கத்தை உருவாக்கும். அதுவரை இலங்கை ஆளும்வர்க்கத்தின் ஆதரவுடன் பௌத்த காட்டுமிராண்டித் துறவிகளின் ஆதிக்கம் தொடரும்.