Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

TELO இயக்கத்திலிருந்து சிவாஜிலிங்கம் ராஜினாமா

sivajilinghamநாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version