Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

TELO இயக்கத்தின் மாநாடு : இந்திய துணை இராணுவப்படை அரசியல் துணைப்படையானது

TELO_inioru1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் (LTTE) அழிக்கப்பட்டது. அதன் தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான போராளிகள் அழித்தொழிக்கப்பட்டனர். இந்திய சமாதானப் படை இலங்கையை ஆக்கிரமித்த வேளையில் அவர்களின் துணைப்படையாக அழிக்கப்பட்ட ரெலோ இயக்கம் மீண்டது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கட்சிகளில் ஒன்றான ரெலோ 8வது வருடாந்த மாநாட்டில் இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றினார்.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு மாநில சுயாட்சி போன்ற அமைப்பே போதுமானது எனக் கூறும் செல்வம் அடைக்கலநாதன் அதனையும் இந்தியா போன்ற நாடுகளின் துணையோடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

ரெலோ இயக்கம் இந்திய இராணுவத் துணைப்படையாக வட-கிழக்குப் பிரதேசங்களை ஆக்கிரமித்த வேளையில் நுற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். சித்திரவதைக்கு உள்ளானார்கள். இந்திய இராணுவம் இழைத்த போர்க்குற்றங்களில் ரெலோ இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டன.

இந்திய அமைதிப்படைக்குத் துணை இராணுவப்படையாகச் செயற்பட்ட ரெலோ அமைப்பு இன்று இந்திய அரசியலின் துணைப்படை!

செல்வம் அடைக்கலநாதனின் மாநாட்டுப் பிரகடனத்தின் இறுதிப்பகுதி:

தமிழினம் ஒரு தேசிய இனம். ஓவ்வொரு தேசிய இனத்திற்கும் இருப்பதைப் போல, எமது இனத்திற்கும் இலங்கைத் தீவிற்குள் ஒரு தேசம் உண்டு. நீண்ட கால அடக்குமுறைகளுக்கும், இனப் பாகுபாட்டிற்கும், வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து மீளுவதற்கான ஒரே வழியாகவே எமது இனத்திற்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கும் இலட்சியத்தோடு நாம் எல்லோரும் போராடினோம். ஆனாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப வழிவிட்டும், வேறு மார்க்கங்களை முயன்று பார்க்கும் நோக்குடனும், இலங்கை என்பது ஒரே நாடு என்ற வரையறைக்குள் தீர்வு தேடும் முயற்சியில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நாம் ஈடுபட்டு வருகின்றோம். இலங்கை என்ற ஒரு ஐக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கென ஒரு தனியாக சுயாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான ஒரு தீர்வாக, தற்காலச் சூழலில் அமையும் என்றே தமிழீழ விடுதலை இயக்கம் கருதுகின்றது. அந்தவகையில், எமது இனத்திற்கான எமது தேசத்தில், எம்மை நாமே ஆளுவதற்கு ஏற்றதான ஒரு பூரண சுயாட்சிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஆகும்.

நிலப் பகிர்ந்தளிப்பு, நீதி ஒழுங்கு, கல்வி வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் நாமே முடிவெடுத்து, எமது தேசத்தில் எம்மை நாமே ஆளுகை செய்யக்கூடிய அதிகாரங்களுடனான ஒரு சுயாடசிக் கட்டமைப்பாக அது அமைய வேண்டும்.அந்த வகையில், மிக அடிப்படையான தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பு நிறுவப்படாது போனால், தமிழினத்திற்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதே ஒரே வழி என்ற முடிவை தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி எடுக்கும் நிலை வரலாம். மூன்றாம் தரப்பு இந்த நாட்டின் அரசாங்கத்தினது தற்போதைய போக்கை உற்று அவதானிக்கும் போது, அர்த்தம் மிக்க எவ்வகையான ஒரு தீர்வையும் அது தானாகவே முன்வந்து தமிழ் மக்களுக்கு வழங்கும் என்று நாம் கருதவில்லை. அதனால், தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் நேரடியான ஈடுபாடு அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.

அத்தகைய ஒரு மூன்றாம் தரப்பாக, இந்தியாவும் இருக்கலாம், அல்லது வேறு ஒரு நாடும் இருக்கலாம். அதே நேரம், தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தான் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரத்தை இந்தியா மறந்துவிடக்கூடாது என்பதுடன், தனக்கிருக்கும் தார்மீகக் கடமையிலிருந்தும் இந்தியா விலகிவிடக்கூடாது என்பதனையும் தமிழீழ விடுதலை இயக்கம் நினைவுபடுத்த விரும்புகின்றது.

Exit mobile version