Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம்

isis_and_ltte_uk

பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர் பேரவை ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும், அரசுகளோடு தொடர்புடையவர்களைச் சந்திப்பதும் தமது வேலைத்திட்டம் எனப் பிரகடனப்படுத்தியது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் மாவீரர் தினம் நடத்துவதைத் தவிர வேறு குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை.

மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நடைமுறைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களை அன்னியப்படுத்தி தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே தமிழர் ஒருங்கிணைபுக் குழுவின் நோக்கமாக இருந்துவந்தது. பிரித்தானியாவிலுள்ள உதைபந்தாட்ட நிறுவனங்கள் தமது கொடி, முத்திரை போன்றவற்றஒ விற்பனை செய்து அந்த நிறுவனங்கள் மீது வெறித்தனமான பற்றுக் கொண்டவர்களை உருவாக்கிக் கொள்வது போல TCC உம் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டது. இவர்கள் ஒரு கருத்தை நோக்கி உள்வாங்கப்பட்ட சிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்ல. அடையாளங்களை நோக்கி உள்வாங்கப்பட்ட அடிமைகள்.

இவர்கள் தமிழீழம் பெற்றுத்தரப் போவதாக கூறும் பிரதேசங்கள் அழிக்கப்பட்ட போதும், சுன்னாகம் சிதைக்கப்பட்ட போதும், சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இவ்வைமைப்புக்கள் மௌனம் சாதித்தன.

இதன் ஒரு படி மேலே சென்று புலிகள் ஒருங்கிணைகிறார்கள் என்று ராஜபக்ச தனது பேரரசை நிறுவிக்கொண்ட வேளையில், ஆம் நாம் தான் புலிகள் என்று TCC பிரகடனப்படுத்தி ராஜபக்சவிற்குத் துணை சென்றது.

ராஜபக்சவுடனும், இலங்கை அரசுடனும் நேரடியான தொடர்புகளைப் பேணிக்கொண்டவர்கள் புலிக்கொடியைக் காட்டி புனிதப்படுத்திக்கொண்டார்கள்.
இதன் மறுபக்கத்தில், ஈழப் போராட்டத்தை அழித்த ஏகாதிபத்திய நாடுகளிடம் போராட்டம் முழுமையையும் ஒப்படைத்த ‘கைங்கரியத்தை’ BTF செய்து முடித்தது. இன்று மேற்கு ஏகாதிபத்தியங்கள் தமக்கு முழுமையாகப் பயன்படக்கூடிய அரசை நிறுவிக்கொண்ட பின்னர் BTF இடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லாத வெற்று அமைப்பாகிவிட்டது.

தவறான வழியாயினும் அதுவே தமது வழிமுறை என நேரடியாகவே முன்வைத்துச் செயற்பட்ட BTF இடம் குறைந்தபட்ச நேரமையக் காணமுடிந்தது.

BTF இன் வேலைத்திட்டம் இன்று காலாவதிவிட்டபின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு நாளோடு மட்டும் சேடமிழித்துக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு அமைப்புக்களுமே தமிழ்ப் பேசும் மக்களை அவலத்திலிருந்து மீட்டு ஆதரவளிப்பதற்குப் பதிலாக தமது சுய இலாபத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளன.

இந்த நிலையில் BTF ஐ மிரட்டி புலிகளில் இலச்சனையுடன் துண்டுப் பிரசுரம் ஒன்று லண்டனைச் சார்ந்த தமிழர் பகுதிகளில் தமிழர்கள் மத்தியில் வினியோகம் செய்யபட்டுள்ளது. இத் துண்டுப் பிரசுரத்தில் BTF இற்கு நேரடியாகவும் ஏனையவர்களுக்கு மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற கோழைகள் மட்டுமே மிரடல்கள் ஊடாகச் சாதிக்க முற்படுவார்கள். கருத்து மக்களைப் பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாகப் பரிணமிக்கும் என்பார்கள்.

கருத்துக்களின் மோதலே புதிய கருத்துக்களை தோற்றுவித்து சமூகத்தை முனோக்கி நகர்த்தும். நாளாந்த வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு நாளைய தவறுகளையும் கருத்துக்களைக் கேட்பதன் ஊடாகவும் அவற்றை மறு பரிசீலனை செய்வதற்கு ஊடாகவுமே முன் நோக்கிய வெற்றிப் பாதையைக் கண்டுகொள்கிறோம்.

புலிகளின் இலச்சனையுடன் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் பின்னணியில் TCC அமைப்பின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்படவிட்டாலும் TCC இன் கருத்துக்களையே அது முன்வைக்கிறது.

தமிழீழம் என்ற கருத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளாதரவர்களும், புலிக் கொடியை ஏந்தாதவர்களும் துரோகிகள் எனத் துண்ண்டுப் பிரசுரம் குறிப்பிடுகிறது.

தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்லும் உரிமைகாகப் போராடுவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது. பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் பிரிந்து செல்வதா இணைந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பார்கள். ஐக்கிய நாடுகள் நிறுவனம் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கிறது.

தமிழீழம் என்று கோரிக்கை முன்வைக்கும் போது அது பிரிவதற்கானதாக மாறிவிடுகிறது. பிரிந்து செல்லும் உரிமை என்ற தேசிய இனங்களின் உரிமைக்கான நியாயத்தை நிராகரித்து பிரிவதை மட்டுமே நியாயமாக முன்வைக்கிறது,

இதனால் தமிழர்கள் பிரிவினைவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். உலகில் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றனர்.

இதே காரணத்தால் இலங்கை அரசு பிரிவினையைத் தடை செய்ய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொண்டது. பிரிந்து செல்வதற்கான உரிமையை வழங்கக் கோரி இலங்கை அரசை எதிர்த்துப் போராடுவதற்கு யாரும் முன்வரவில்லை.

ஆக, TCC தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழிப்பதற்காக அன்னிய நாடுகளாலும் இலங்கைப் பேரினவாத அரசாலும் பாதுகாக்கப்படும் அமைப்பே. அன்னியர்களின் எடுபிடிகள் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை கையகப்படுத்தி அழிப்பதை நிறுத்துவதற்கான ஒற்றுமையே உரிமைக்கான ஒற்றுமை. ஏனையவை பிழைப்புக்கானவை.

தவிர, புலம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களையும், புலி இலச்சனையைப் பொறித்து காட்டிக்கொடுக்கும் செயலை இத் துண்டுப்பிரசுரம் செய்துளது.

பீரீஎப் நடத்தும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் வன்முறையைத் தூண்டும் முன்னுரையாகவே இத் துண்டுப்பிரசுரம் கருதப்படுகின்றது. இதனை எதிர்கொள்வதற்கான கருத்துப் பலமும், கருத்துரீதியாக உள்வாங்கப்பட்ட மக்கள் பலமும் பீரிஎப் இடம் இல்லை.

ஆக, புலிகளின் பெயரால் பிழைப்பு நடத்தும் நயவஞ்சகர்களின் கூட்டம் இன்னும் மக்களைச் சூறையாடத் தயார் நிலையிலுள்ளது. மக்களின் அடிப்படைபிரச்சனைகளை புறம்தள்ளி தமது பிழைப்பையை முன்னிலைப்படுத்தும் இக் கூட்டம் அரசியல் நீக்கம் செய்யப்படுவது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன் நகர்த்துவதற்கான முன் நிபந்தனை.

Exit mobile version