ஒரு நாட்டின் அரசு, அது நல்லாட்சி என்று பெயர்வைத்துக்கொள்ளட்டும், வேண்டுமானால் மீட்பர்கள் ஆட்சி செய்வதாகப் பீற்றிக்கொள்ளட்டும், விசாரணைகள் எதுவுமின்றி தமது சொந்த மக்களை அடைத்துவைத்திருப்பதை நியாயம் என்று கூறினால் அது அரசு என்ற தகைமையை இழந்துவிடுகிறது.
கைதிகளில் பெரும்பாலானவர்கள் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல கைதிகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கே முரணான வகையில் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் சந்தேகத்தின் பேரில் ஒருவரை 18 மாதங்கள் வரை விசாரணையின்றிச் சிறைவைக்க அனுமதிக்கிறது. சில அரசியல் கைதிகள் 1997 ஆம் ஆண்டிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மைத்திரி – ரனில் அமெரிக்க அடியாள் அரசு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடத்தும் நாடகத்திலும் இச் சட்டவிரோத நடவடிக்கை தொடர்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 31 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படபோதே அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார்.
இலங்கைச் சட்டங்களுக்கே முரணான வகையில் சிறைப்பிடித்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதற்கும், வழக்குத் தாக்கல் செய்வதற்கும், சட்டம் படித்தவர்களின் குழாம் எனப் புழகாந்கிதமடையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு குறைந்தபட்ட வழிமுறைகள் கூட இல்லையா என்ன?
‘ஒரு தேசம் இரு நாடு’ கஜேந்திரகுமார் குழுமம் மழைக்காலத் தவளை போல தேர்தல் காலங்களில் மட்டும் கூச்சலிடுவது அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்யாது.
மாவீரர் தின வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நவம்பர் மாதத்தில் புலம்பெயர் பினாமித் தேசியவாதிகள் அரசியல் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விடமாட்டார்கள்.
இலங்கை அரசின் சிறைகளில் அடைத்த்வைக்கப்பட்டுள்ள சரணடந்த புலிகளின் போராளிகளின் பெயர் விபரங்கள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று பிணை வழங்கப்பட்ட 31 கைதிகள் தேவையேற்படும் போது மீண்டும் கைது செய்யப்பட்டு விபரங்களை மறைத்து சிறையில் கூட கொன்று போடப்படலாம்.
இலங்கை அரசிற்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட வேண்டிய கடமை இன்று சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனதும் கைகளைச் சென்றடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளில் சபையிலிருந்கு உலகம் முழுமைக்கும் புதிதாக மனிதாபிமானம் கற்பிக்கும் அரசு தனது முதல் நாள் ஆட்சியிலிருந்து நடத்திவரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாத நடவடிக்கைகளை உலகமக்கள் மத்தியில் கொண்டு சென்று இலங்கைப் பேரினவாத அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தத் தவறினால் அது மக்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச்செல்லும்.