Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களின் கழுத்தில் துக்குக் கயிற்றை மாட்டிவைத்திருக்கும் ஊடகங்கள்!

Suicideசெய்தி என்பது வெறும் விற்பனைப் பண்டம் என்பதை ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். உலகின் முன்னணி வியாபார ஊடகங்கள் அனைத்தும் இணைந்து தாக்குதல் நடத்திய போதும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கிரேக்க மக்கள் வாக்களித்து பெரு வெற்றியீட்டினார்கள். பிரித்தானியாவில் ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து ஊடகங்களும் தாக்குதல் நடத்திய போதும் தொழிற்கட்சித் தேர்தலில் அவரது வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. புதிய மக்கள் ஊடகங்களின் வளர்ச்சி இதற்கு மற்றொரு காரணமாக அமைந்திருந்தது.

இன்று தமிழ் ஊடகப் பரப்பு இன்னும் பின் தங்கிய ஒற்றைப்பரிமாண வியாபார நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. வடக்குக் கிழக்கில் ஏதாவது குறிப்பிடத்தக்க பேரினவாத சம்பவங்கள் நடைபெற்றாலே போதும், அதனை எப்படி விற்பனைப்பண்டமாக மாற்றுவது என்பதே புலம்பெயர் இணைய ஊடகங்களின் முதலாவது நோக்கமாக உள்ளது. செய்தி ஒன்று பரப்பபடும் போது அதன் நேரடியான சம்பவங்களின் பின்னணியிலுள்ள அரசியல் தொடர்பாகப் பேசப்படுவதில்லை. சம்பவங்களை மட்டும் விபரிக்கின்ற செய்தி என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒட்டுமொத்தச் சூழல் குறித்த தவறான விம்பத்தை வழங்கி வாசகர்களையும் பார்வையாளர்களையும் திசைதிருப்பி விடுகின்றது.

நடுநிலை என்பது சாராம்சத்தில் ஒருபக்க வாதமாகி அது அதிகாரவர்க்கத்தின் பக்கத்தைப் பலப்படுத்திவிடுகிறது. நாளுக்கு நாள் புதிதாக முளைக்கும் இணையச் செய்திக் காவிகள் தமிழ் ஊடகங்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்திகொள்கின்றன. செய்தி என்ற விற்பனைப் பண்டத்தை மூலதனமாகக் கொண்ட இந்த ஊடகங்கள் எமது சமூகத்தை பின் தங்கிய நிலையில் பேணுவதற்கு பெரும் பங்காற்றி வருகின்றன.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கோப்ரட் மீடியாவால் ஆளப்பட்டன. மக்களின் சிந்தனை அதனை நோக்கி மாற்றப்பட்டது. ஜுலியன் அசாஞ்சின் விக்கி லீக்ஸ் தகவல்கள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய ஊடகப் புரட்சி ஜனநாயக ஊடகங்களைத் தோற்றுவிக்கவும் மக்கள் மத்த்யியில் உண்மைகளைக் கூறவும் பிரதான பாத்திரத்தை வகித்தது எனலாம்.

ஈழத் தமிழ் ஊடகங்கள் இவ்வாறான மாற்றத்தை இன்னும் கடந்து செல்லாத பின் தங்கிய நிலையிலேயே இன்னும் காணப்படுகின்றன.

செய்திகளும் சம்பவங்களும் வெறும் நுகர்வுப் பண்டமாக மாறியதற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து இயக்கப்படும் ஊடகங்கள் மிகப்பெரும் பாத்திரத்தை வகித்திருக்கின்றன. 30 வருட ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த சமூகம் என்பதற்கு எந்த அடையாளமும் இன்றி எங்காவது அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொள்ளும் மனோபாவத்தைக்கொண்ட அரசியல் வாதிகளும் ஊடக மாபியாக்களும் போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழித்துத் தரைமட்டமாக்கிவருகின்றன.

உள்ளூர் மக்களின் பின் தங்கிய சமூக விழுமியங்களையும் அரசியலையும் பேணுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளின் பின் தங்கிய மனோநிலைக்குத் தீனி போடுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இயக்கப்படுகின்றன.

இந்த இரண்டு சீரழிந்த வாக்குப் பொறுக்கிக் கட்சிகளையும் பேணிப் பாதுகாக்க ஊடகங்கள் செயற்படுகின்றன. இவற்றை மீறி மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோன்றிவிடாமல் பாதுகாப்பதற்கு இடையிடையே ஐங்கரநேசன் விக்னேஸ்வரன் போன்ற குறுக்கோடிகள் இயக்கப்படுகின்றனர்.

வாக்குப் பொறுக்கிகள் பாரளுமன்றத்திற்குச் சென்று உறுப்பினர் நாற்காலிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தம்மாலான அனைத்தையும் செய்துகொள்ளவும், யாரையும் பயன்படுத்திக்கொள்ளவும் தயார் நிலையிலுள்ளனர். இதனால் ஊடகங்களுடனான கொடுக்கல் வாங்கல் கணக்குகள் தவறாமல் நடைபெறுகின்றன.

80 களில் தோற்றம் பெற ஆரம்பித்த தமிழ் அறிவியல் சமூகமும், 70 களின் தோன்றிய முற்போக்கு அரசியலும் அழிக்கப்பட்டு சோதிடத்திற்கும், சினிமா ஆபாசச் செய்திகளுக்கும் நடுவே இணைய ஊடகங்களில் தொங்கும் செய்திகள் நமது சமூகத்தின் கழுத்தில் துக்குக் கயிற்றை மாட்டிவைத்திருக்கின்றன.

Exit mobile version