கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை இலங்கை அரச பாசிசப் பாராளுமன்றத்திற்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினராகி மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்கிறார். சம்பந்தனைப் பொறுத்தவரை இலங்கை அரச பாசிசப் பாராளுமன்றத்திற்குச் சென்று குறைந்தபட்சம் சமஷ்டி ஆட்சியையாவது பெறுவேன் என்கிறார்.
இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி இல்லாத காலப்பகுதியில், ஓரளவு ஜனநாயாகம் நிலவியது. பிரதமர் ஆட்சி நிலவிய, இராணுவமும் உளவுத்துறையும் பலமற்றிருந்த எழுபதுகளின் இறுதிப் பகுதிகள் வரை பாராளுமன்றத்திற்குச் சென்று தமிழீழம் பிடித்துத் தருவதாகவும், தனி மாநிலமாக வடக்குக் கிழக்கை உருவாக்குவதாகவும் தேர்தல் மேடைகளில் முழங்கிப் பாராளுமன்றம் சென்றார்கள்.
கஜேந்திரகுமார் இன்று மேடைகளில் ஈனக்குரலில் ஒரு நாடு இரு தேசம் என்று முனகுவதைப் போலல்ல, அன்று ஆயிரமாயிரம் மக்கள் மத்தியில் ஈழமே பிடித்துத் தருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி முழங்கிற்று.
பாராளுமன்றத்திலும் எங்களுக்குத் தமிழீழம் மட்டும் தான் வேண்டுமென்று அமிர்தலிங்கம் முழங்கினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிங்களவர்களோடு வாழத் தயாரில்லை என்றும் தமிழர்கள் உயர்ந்த பண்புகளைக் கொண்ட இனம் என்றும் உரத்த குரலில் கூறினார்.
எதுவுமே நடக்கவில்லை. பாராளுமன்றத்தில் சாதிக்கப் போவது எதுவுமில்லை என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் வாக்குச் சேகரிப்பதற்காக அதே கோசங்களை முன்வைத்தார்.
60 வருட கால அனுபவத்திற்குப் பின்பும் டக்ளஸ், கஜேந்திரகுமார், சம்பந்தன் போன்ற அழுக்குப் படிந்த அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்குச் சென்று சாதிப்போம் என மக்களை நம்பக் கோருகிறார்கள்.
சுயநிர்ணைய உரிமையை மறுத்த சிங்கள பௌத்த அதிகாரவர்க்கம் பாராளுமன்றத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை நிராகரிக்கின்றனர் என மகிழ்ச்சி கொள்கிறது.
தேர்தலாலும் பாராளுமன்றதாலும் மாற்றத்தை ஏற்படித்தலாம் என சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் தமிழ் அடியாள்படைகள் மக்களை நம்புமாறு கேட்கின்றன.
போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொடுத்த ஆயிரக்கணக்கன வீரத் தமிழ் தாய்களையும், மண்ணில் உரமாகிப் போன ஆயிரக்கணக்கான போராளிகளையும் அவமானப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கும் இக் கயவர்கூட்டம் அரசியலிலிருந்து அகற்றப்பட்டு புதிய மக்கள் சார்ந்த தலமை தோன்ற வேண்டும்.
சிங்கள பௌத்த ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை நிராகரிப்பதாக ஒரே குரலில் மக்கள் எமது மண்ணில் விதைக்கப்பட்ட போராளிகளதும் மக்களதும் தியாத்தைப் பெருமைப்படுத்துவார்கள். தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்ப்பதனூடாகவே உலகமக்களுக்குப் பாராளுமன்றக்தை நிராகரிப்பதாக மக்கள் கூறமுடியும்.