தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே கூர்மையடைய ஆரம்பித்துவிட்டது. பிரித்தனியர்களால் உருவாக்கப்பட்டு புகைந்துகொண்டிருந்த தேசிய இன ஒடுக்குமுறையை தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்கள் ஒன்றிணைந்து ஆழப்படுத்தின.
தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் படி நிலை வளர்ச்சி பெற்று சீராக மேல் நோக்கிச் செல்வதற்குப் பதிலாக உணர்ச்சி வசப்படுத்தப்பட்ட இளைஞர்களின் தனி நபர் கொலைகளாக மாறியது. சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம் என தமிழரசுக் கட்சி மேடைகளில் முழங்குவதிலிருந்து ஆரம்பமான இனவெறிக் கலாச்சாரம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவெறியாக மாற்றியது.
உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஈழப் போராட்டத்தை, உளவு நிறுவனங்களதும், இனவெறியர்களதும், அதிகாரவர்க்கத்தினதும் வன்முறையாகவே பார்த்தனர்.
ஆயிரக்கணக்கான மக்களதும் போராளிகளதும் தியாகங்கள் தலைமைகளால் சிதைத்துச் சீரழிக்கப்பட்டன.
தமிழ் இனவெறியும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையும் ஒன்றையொன்று தீனிபோட்டு வளர்த்தன.
நமது பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவதற்குப் பதிலாக “ஆண்ட தமிழன் மீண்டும் ஆளுவான்” என வீரவசனம் பேரி வாக்குப் பொறுக்கி பாராளுமன்றத்தில் வசதிகளை அனுபவித்தனர் அரசியல் வாதிகள். இன்று பாராளுமன்றம் சென்று ஒரு நாடு இரு தேசம் கேட்போம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்பது போலவே அன்று பாராளுமன்றம் சென்று தமிழீழம் பிடிப்போம் என்று கூறினர்.
ஒற்றையாட்சி சோவனிசப் பாராளுமன்றத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு அடிப்படை உரிமை கேட்பது கூடச் சாத்தியமில்லை என அன்று ஜனநாயக சக்திகள் கூறிய போது “செருப்புத் தைத்தவர்கள்” கண்டுகொள்ளவில்லை. இன்று வரலாறு மறுபடி திரும்பியுள்ளது. மீண்டும் உணர்ச்சிவசப்படுத்தல்கள். வீர வசனங்கள். அழிவின் விழிம்பிற்கு மக்களை அழைத்துச் செல்லும் அரசியல்வாதிகள் மறுபடி முகாமிட்டுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளிலோ, முள்ளிவாய்க்காலில் தலைவர் உள்ளேவிட்டு அடிப்பார் என மக்களை எமற்றி புலிகளை அழித்த அதே முகங்கள் மீண்டும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியுள்ளன.
இலங்கை இராணுவத்தை அடித்து வெளியேற்றுவோம் என வீரவசனம் பேசிய இவர்கள் இன்று ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்வதன் பின்னால் பெரும் ஏகாதிபத்தியச் சதி உள்ளது.
எப்படி அழிவு ஏற்பட்டாலும் ஏற்படட்டும் என்று கிடைக்கும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இவர்கள் பேரினவாதிகளின் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்வதற்குக் கூட மக்களை உசுப்பேற்றி வாக்குக் கேட்கிறார்கள்.
ஆக, மீண்டும் ஒரு அழிவிற்கு அத்திவாரமிடப்படுகிறது.
ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை நாம் நிராகரிக்கிறோம் என மக்கள் உலகிற்குச் சொல்லவேண்டும். சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். இதுவரை காலமும் பாராஉமன்றத்தில் எதையும் சாதிக்காதவர்கள் இனி எதைச் சாதிக்கப்போகிறார்கள். மக்களை ஏமாற்றும் குரல்கள் உலகத்திற்குச் சொல்வது ஒன்று தான்: நாங்கள் பேரினவாதப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று! . மக்கள் தேர்தலைப் புறக்கணித்து ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம் என்றும் பேரினவாதப் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உலக மக்களுக்குச் சொல்லவேண்டும்.
இன்று வாக்களித்துப் பேரினவாதிகளின் பன்றித்தொழுவமான பாராளுமன்றத்தை ஏற்றுக்கொண்டால், சிங்கள பௌத்த ஆட்சியை ஏற்றுக்கொண்டதாகபே பொருள்படும். வியாபாரிகளின் சூறையாடலுக்காக வாக்குப் போட மக்கள் அழைக்கப்படுகிறார்கள். தேர்தலை மக்கள் முற்றாக நிராகரிப்பதன் ஊடாகவே அவர்கள் இன்னும் உறுதியோடிருக்கிறார்கள் என்று உலகிற்குச் சொல்லலாம்.