கடந்த 2015 மார்ச் 22-29 ம் திகதிகளில் நடைபெற்ற பிரான்சின் பிராந்திய நிர்வாக சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சேர்ஜியா மகேந்திரனும் ஒருவர். இவர் கார்ஜ் லெ கோணேஸ், ஆர்னோவீல் எனும் கிராமங்களின் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் வெற்றியை வாழ்த்தி பாராட்டும் வைபவம் கார்ஜ் லெ கோணேசில் நடைபெற்றது.
2005 ஆம் ஆண்டில் பிரான்சில் சார்கோசி அரசிற்கு எதிராக நடைபெற்ற இளைஞர்களின் எழுச்சி புலம்பெயர்ந்த வேற்று நாட்டவர்களின் எழுச்சி போன்ற வடிவத்தை எடுத்தது. அந்த எழுச்சியின் போது, லா குருனேவ் என்ற பாரிசின் புற நகர்ப் பகுதியில் இளைஞர் ஒருவர் பிரஞ்சுப் போலிசாரால் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலைகள் குறித்து பிரான்சின் அக்காலத்தைய ஜனாதிபதி சார்க்கோசியிடம் கேள்வ்யெழுப்பப்பட்ட வேளையில், கொலை நியாமானது தான் என்றும் கொலை நடந்த இடத்தைச் சுத்தப்படுத்துவதான் தமக்கு முன்னால் உள்ள பணி என்றும் கூறினார்.
அதே சார்கோசியின் கட்சியில் இணைந்துகொண்ட சேர்ஜியா மகேந்திரன் கட்சியின் சார்பில் வெற்றிபெற்றார். ஒடுக்குமுறையின் வலிகள் சுமந்த சமூகம் எப்படி தீவிர வலதுசாரிகளுடன் தம்மை அடையாளப்படுத்துகிறது என்பது சிக்கலான ஆய்வுகளூடாக ஆராயப்படவேண்டிய ஒன்று. தென்னிந்தியாவில் தமிழ்த் தேசியக் குழுக்கள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்கள் இட்லரைத் தமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை இந்தப் போக்கு பொதுவானதாக வளர்ந்துள்ளது.
இரத்தக்கறை படிந்த இவ்வாறான வலது சாரிக் குழுக்களோடு தம்மை அடையாளப்படுத்தும் போக்கு இறுதியில் இலங்கை அரசுடனும் தம்மை இணைத்துக்கொள்கிறது.
தம்மை சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறவர்களாக இனம்காட்டிக் கொள்கின்ற பிற்போக்கு நிலப்பிரபுத்துவ அரசியலின் பிரதிநிதிகள் புலிசார்பு, புலி எதிர்பு என்ற வழமையான முகாம்களைக் கடந்து ஒரு புள்ளியில் இணைந்துகொள்கின்றனர்.
பிரான்சில் பிரான்சில் ‘தம்மைச் சம உரிமை இடதுகள்’ எனச் சொல்லிக்கொள்கிறவர்களும், சாதி ஒடுக்கு முறைக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் தலித் முன்னணி போன்ற குழுக்களும், புலி ஆதரவாளர்களும், புலி எதிர்ப்பாளர்களும் தீவிர வலதுசாரிக் குழுக்களின் ஆதரவாளர்களாக ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் முழுமையையும் தீவிர வலதுசாரிகளாக அடையாளப்படுத்தி உலகின் ஏனைய ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதில் இவர்களே பெரும் பங்காற்றுகின்றனர்.
புலம்பெயர் சமூகத்தின் இரண்டாவது சந்ததியான சேர்ஜியா மகேந்திரனின் வலதுசாரி அடையாளத்தைப் பாராட்டும் நோக்கில் இணைந்து கொண்டவர்கள் தலித் முன்னணி என்ற அமைப்பின் தலைவர் தேவதாசன், நடிகர் சோபாகச்தி, ஈபிடிபி இன் பிரதிநிதி கோவை நந்தன் ஆகியோர் மட்டுமல்ல இலங்கை அரசின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவரும் அடங்குகின்றனர்.
இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நாசகார வலதுசாரிகளுடன் தமிழ்ப் பேசும் புலம்பெயர் சமூகத்தை அடையாளப்படுத்துவதில் இவர்களே ஊக்க சக்திகள். இதனூடாக இலங்கை அரசின் நேரடித் தலையீடு புலம்பெயர் நாடுகளின் தமிழர்கள் மத்தியில் தோன்றியிருப்பது ஆபத்தான ஆரம்பம்.
ஈபிடிபி கோவை நந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பாராட்டுக் கூட்டத்தில் பிரான்சிற்கான இலங்கைத் தூதரகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலந்துகொண்டு, தலித் முன்னணி, சோபா சக்தி ஆகியோருடன் இணைந்து கொண்டமை தற்செயலானதல்ல. நீண்ட அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும்