Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழர்களின் அவலத்தின் மீது தென்னிந்திய சினிமாக்காரர்கள் நடத்திய வியாபாரம்: சேரன் ஒப்புதல்

Director Cheran1பெரும்பாலான தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது அவ்வப்போது அரும்பும் அக்கறையும் தமிழ் இனவாதமும் எந்தப் பின்னணியைக் கொண்டது என அதன் ஆரம்பம் முதலே பலர் கூறிவந்த போதும் இயக்குனர் சேரன் அதனை வெளிப்படையாகவே இப்போது கூறியுள்ளார்.

தோல்வியடைந்த தமிழ் சினிமாக் காரர்களின் குறிப்பாக இயக்குனர்களின் இறுதிப் புகலிடமாக ஈழத் தமிழர் பிரச்சனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு பயன்படுத்தி ஓரளவு வெற்றிகண்டவர்களில் சீமானை முதலிடத்தில் வைத்துக்கொள்ளலாம். சினிமாவில் வெற்றிபெற முடியாமல் போனபோது மற்றொரு இலகுவான பணம் சேர்க்கும் வழியை அவர்கள் தேட ஆரம்பித்தனர். விடுதலைப் புலிகளின் தமிழ் நாட்டிற்கு உரிய அரசியல் கூலிகளாக சீமான் போன்ற சினிமாக் காரர்கள் பயன்படுத்தப்பட்டனர். விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னான சூழலைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் போன்றவர்கள், பேரம் பேசும் நிலைக்கு வளர்ந்துவிட்ட அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவிப்பதில் வெற்றிகண்டுள்ளனர்.

அதன் மறுபக்கத்தில் ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்தி அதனை வியாபாரமாக்கிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் தென்னிந்தியாவில் சினிமாக் கனவில் தோல்வியடைந்தவர்களை ஈழக் கனவை விதைப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

இக் காரணங்களைத் தவிர புலம் பெயர்ந்த தமிழர்கள் தென்னிந்திய சினிமாவினதும் விஜய், சண், ஜெயா ரீவி உட்பட தென்னிந்திய கலைக் குப்பைகளதும் தீவிர நுகர்வாளர்களானார்கள். இதனால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதென்பது தென்னிந்திய சினிமாக் காரர்களின் வியாபாரத்திற்குத் தேவையானதாக இருந்துவந்தது. இதுவே தென்னிந்திய சினிமாக்காரர்களின் தமிழ் உணர்வு மற்றும் தமிழினவாதத்தின் பிரதான ஊற்றுமூலம்.

இவ்வியாபாரம் பாதிப்படையும் போது தமிழின உணர்வும் செத்துப்போய்விடும் என சேரன் போன்ற சினிமாக்காரர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களான லைக்கா தயாரித்த முதல் திரைப்படம் சேரனுடையதே என்பது மற்றொரு தகவல்.
சேரன் போன்றவர்களின் மில்லியன்கள் பெறுமதியான சினிமாக் கனவுகளில் புலம்பெயர் தமிழர்கள் சிலர் நடத்தும் இணையங்களால் கீறல் விழுந்த போது ‘திருட்டுடீவீடி போன்ற இணையங்களை இலங்கைத் தமிழர்களே நடத்துகிறார்கள், இவர்களுக்காக ஏன் சினிமா உலகம் போராடியது என எண்ணத்தோன்றுகிறது’ என்கிறார்.

உலகத்தின் மக்கள் கூட்டத்தின் ஒருபகுதி கொல்லப்பட்டதற்காக சில மணி நேரங்களைச் செலவு செய்தமையை சேரன் திருட்டுடீவீடி இற்கு விலை பேசுகிறார்.

எந்தச் சமூகப் பற்றுமின்றி கலையையும் கலாச்சாரத்தையும் சிதைக்கும் தென்னிந்திய சினிமாவின் இயக்குனர் ஒருவரிடமிருந்து இதைவிட அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படையானது, இன்னொரு வகையில் பார்த்தால், இவ்வாறான கலாச்சாரக் குப்பைகளின் பெறுமானத்தைக் சிதைக்கும் திருட்டு டீவீடீ போன்ற இணையங்கள் தமிழ் சினிமாவிற்கும் தமிழ்க் கலாசாரத்திற்கும் ஒரு வகையில் சேவை செய்கிறார்கள் என்று கூடக் கருதலாம்.

Exit mobile version