மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டுப் பிரதமராவதே தமது நோக்கம் என அறிவித்துள்ளார். அதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமராகப் போட்டியிட மைத்திரிபாலவின் அனுமதி கிடைக்காவிட்டால் வேறு வழிகளில் போட்டியிட ஆலோசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் இனபடுகொலைக்கு முன்னும் பின்னும் இலங்கையைச் சூறையாடிய சுதந்திரக் கட்சியைச் சார்ந்த குழு ஒன்று அவரை மீண்டும் பிரதமராக்க முயற்சிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் புலிகள் வாழ்கிறார்கள் என்றும் அவர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்பதுமே மகிந்தவின் பிரதான சுலோகமாகக் முன்வைக்கப்படுகின்றது.
தமிழர் தரப்பில் இனவாதத்தை வியாபாரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தும் புலம்பெயர் மற்றும் உள்ளூர்க் குழுக்கள் மகிந்தவின் மீட்சியை மறைமுகமாக ஆதரிக்க்கின்றன. மைத்திரிபாலவின் வருகையின் பின்னர் அரசியல் நடத்துவதற்கான வெளியை இழந்த தமிழ்க் குழுக்கள் மகிந்தவின் மீட்சியை விரும்புகின்றன.
குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்ட மைத்திரிபாலவின் ஆட்சியில் வெறுப்படைந்துள்ள குறித்த பகுதி மக்கள் மகிந்தவிற்கு வாக்களிக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது.
மைத்திரி குழுவை உருவாக்கிய முக்கிய பங்குதாரியான ராஜித சேனாரத்ன குறிப்பிடுகையில் மகிந்த குறித்து மைத்திரி தெளிவான நிலைப்பாட்டிலேயே உள்ளார் என்றார்.
அதேவேளை மகிந்தவிற்கு பிரதான வேட்பாளராகப் போட்டியிட அனுமதிவழங்கப்படும் சாத்தியக்கூறுகளையும் மறுக்கவில்லை.
அன்னப் பட்சி சின்னம் மீண்டும் போட்டியிட்டால் சந்திரிக்கா குமாரணதுங்க தலைமைதாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்னப்பட்சியுடன் யூ.என்.பி இணைந்துகொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனைத் தொடரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. யாரோடு இணைந்துகொண்டாலும் மகிந்த உட்பட இனக்கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தப்ட்ச நிபந்தனையும் இன்றியே கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்பது மட்டும் சந்தேகத்திற்கு இடமற்றது.