Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கண்ணீரைவிட மக்கள் சக்தி பலமானது

sureshமுள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நமது தசாப்தத்தில் நட்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரும் வன்முறை. அதனை நடத்திய அனைவரும் இன்று நமது சமூகத்தின் மத்தியில் சர்வசாதாரணமாக உலாவருகின்றனர். படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள், துணை போனவர்கள், போலி நம்பிக்கைகளை விதைத்து மக்களை முடக்கியவர்கள், இலங்கை இனக்கொலை அரசின் முகவர்கள், ஏகாதிபத்தியங்களை அழைத்துச்சென்று மனிதர்களை இரையாக்கியவர்கள் என்ற அனைத்துத் தரப்புமே நம்மைச் சூழவரவுள்ள சமூகத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டிடுக்கின்றன.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வு வடமாகாண சபையல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

படுகொலைகள் நிகழ்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் தமது உறவுகளை நினவுகூருவதற்கான அடிப்படை உரிமையைப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்த நினைவுகளை எதிர்காலத்தில் மனிதகுல விடுதலைக்கான படிற்கற்களாக மாற்றிக்கொள்ள எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிகழ்வுகளை வாக்குத் திரட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டது.

சுன்னாகம் நீர் இன்னும் மக்களைக் கொலைசெய்து கொண்டிருக்க அங்கிருந்து நந்திக்கடல் நீரின் அருகே நின்று வீரவசனம் பேசியது உணர்வுகளைத் தொடவில்லை. “காலை 10.30 இற்கு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அகவணக்கம் செலுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றினார் அதன்பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஈகைச் சுடர்களை ஏற்றினர்.” என ஆரம்பித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கை புலனாய்வுத்துறை கலந்துகொணவர்களைப் படம்பிடித்தது என்கிறார்.

இந்திய இராணுவம் யாழ்ப்பணத்தில் வெறியாட்டம் நடத்திய போது அதன் துணைக்குழுத் தலைவராகச் செயற்பட்ட சுரேஸ் முன்னின்று நடத்திய கொலைகளில் மரணித்துப்போன மக்களும் போராளிகளும் கூட நினைவுகூரப்படும் புதிய காலத்திற்கான அரசியல் ஒன்றே எமக்குத் தேவை.

இலங்கையை ஆட்சிசெய்யும் அமரிக்க முகவர் அரசும், அதன் பொம்மை ஜனாதிபதி மைத்திரிபலவும் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என உலகை ஏமாற்ற வழங்கியுள்ள ஜனநாயகம் நிரந்தரமற்றது. ஆயினும் அந்த ஜனநாயகத்தை மக்களை அணிதிரட்டி பலப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து இரத்தக் கறைபடிந்த கரங்களில் பாராளுமன்றக் கதிரைகளை ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தினால், அழிவுகள் தவிர்க்கப்பட முடியாதவை ஆகிவிடும்.

பல்தேசிய வியாபாரக் கழுகுகள் இலங்கை முழுவதையும் சுற்றி வருகின்றன. வடக்கும் கிழக்கும் அவற்றின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இலங்கையில் மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் போன்ற சிறுபான்மைத் தேசிய இனங்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர ஆரம்பித்துள்ளனர். சிங்கள மக்களின் ஏழைகள் இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற நிலையை எட்டியுள்ளனர். இவர்கள அனைவரின் மத்தியிலும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் எடுத்துச் செல்லப்படுவதும், மக்கள் சார்ந்த புதிய போராட்டம் முன்னெடுக்கப்படுவதும் இன்று எமக்கு முன்னால் உள்ள தேவை.

Exit mobile version