Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திரைமறைவுச் சந்திபுத் தொடர்பாக சுரேன் சுரேந்தர் : விற்பனைக்கு விடப்பட்டுள்ள போராட்டம்

surensurendiranஉலகத் தமிழர் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே சுவிஸ் அரசின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பும்(Swiss Agency for Development and Cooperation (SDC)) , தென்னாபிரிக்க தன்னார்வ நிறுவனமும்In Transformation Initiative (ITI), எம்.ஏ.சுமந்திரனும் புடைசூழ நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐ.நா இன் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலிருப்பதற்கான முன்னறிவிப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என புலம்பெயர் நாடுகளின் பல்வேறு தரப்புக்கள் கூறுகின்றன.

ஐ.நாவும் அமெரிக்காவும் முன்மொழிந்த போர்க்குற்ற விசாரணை அவர்களின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை முன்னமே தீர்மானித்துவிட்டார்கள். சர்வதேச விசாரணை என மக்களை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இவை தெரியாதவையல்ல. ஐ.நா உம் அமெரிக்காவும் என்ன தீர்மானித்தார்களோ அதையே புலம்பெயர் அமைப்புக்கள் நடைமுறைப்படுத்துகின்றன.

புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தங்களால் தான் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது என்பது முழுவதும் தவறானது. அது இப்போது நிரூபணமாகியுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை வழங்கித் ஆங்காங்கே எழக் கூடிய புதிய போராட்டங்களையும் போராட்ட சக்திகளையும் முடக்கி வைத்தனர். அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் தமது ஏகபோக நலன்களுக்காக நடத்திய நாடகத்தை தமது செயல் திறன் என மக்களை நம்பவைத்துப் பிழைப்பு நடத்தினர். இனியொரு இணையம் உட்பட பலர் மத்தியிலிருந்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கி மோசடி செய்தனர்.

இவை அனைத்தையும் நடத்திவிட்டு எந்த கூச்சமும் அவமான உணர்வும் அற்று இன்றும் மக்கள் மத்தியில் உலாவரும் புலம்பெயர் தலைமைகள் இலங்கை அரசிற்கும் புலம்பெயர் தலைமைகளுக்கும் நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பான தமது கருத்துக்களைக் கூட முன்வைக்கத் தவறிவிட்டனர்.

உலகத் தமிழர் பேரவைக்கு எதிராக பேசுவதற்குரிய தகமையை மக்களை ஏமாற்றியவர்கள் இழந்துள்ளனர் என்பதை அறிவிப்பதற்கான மௌனமாக என்பது தெளிவில்லை. வன்னியில் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட ஆறு வருடங்களில் இத் தலைமைகள் நடத்திய சுத்திகரிப்பில் போராட்டம் பெரும் அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

இவர்கள் நடத்திய அழிப்பு நடவடிக்கையின் மற்றொரு வடிவமே உலகத் தமிழர் பேரவையின் திரை மறைவிலன சந்திப்பு.

தனது சந்திப்புத் தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இப்போது கருத்து வெளிய்ட ஆரம்பித்துள்ளார்.

‘மக்களின் நிலங்களை அரசாங்கம் விடுவித்துவருகிறது; அங்கு வீடுகள் கட்டுவதற்குப் பணம் தேவை; புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டால் அவை இலங்கை சென்று உதவிசெய்யலாம்’ என சுரேன் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்புக்கள் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பணக் கொடுப்பனவுகளை வழங்குபவை. ஆக, சுரேன் சுரேந்திரனின் கருத்துக்கள் பொய்யானவையல்ல.

போர்க்குற்றம் குறித்துப் பேசிய அமைப்புக்கள் இன்று உதவிகள் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். அரசியல் பேசிய மக்கள் கூட்டம் தன்னார்வ அமைப்புக்களின் எடுபிடிகளாக மாற்றப்படுகின்றனர்.
உலகத் தமிழர் பேரவை தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் தமது பங்கை எதிர்பார்த்து மௌனமாகக் காத்திருக்கின்றன எனச் சந்தேகமடைவதில் தவறில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளின் இத் திட்டங்களை நிராகரிக்கின்றவர்கள் துரோகிகளாக்கப்படும் நிலை தோன்றும்.

ஆக, மறைமுகமான மிரட்டல்களுக்கு மத்தியில் போராட்டம் தன்னார்வ நிறுவனங்களின் பணத்தை மையமாகவைத்து விலை பேசப்பட்டுள்ளது. விற்பனை தொடர்கிறது. போதுவாக ஏமாற்றுப் பேர்வளிகளான ஏனைய அமைப்புக்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்பதில் என்ன சந்தேகம்!?

Exit mobile version