உள்ளூராட்சித் தேர்தல்கள் அண்மித்துக்கொண்டிருக்கும் நிலையில் சுமந்திரனின் பெயர் மந்திரம் போன்று அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்படுகின்றன. நேற்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுமந்திரனை மையமாகக் கொண்டே தனது சந்திப்பை நடத்தினார். இந்த வகையில் சுமந்திரனின் பயன்பாடு அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
வடக்குக் கிழக்கில் அமெரிக்க அரசின் நலன்களை நடைமுயுறைப்படுத்தும் நம்பிக்கையான பிரதி நிதிகளில் ஒருவராகச் சுமந்திரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளின் ஆசிக்கு உட்பட்டவர்.
அமெரிக்க ஏகபோக அரசினால் வழி நடத்தப்படும் இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நேர்கோட்டில் முரண்பாடுகளற்றுப் பயணிப்பதற்கான காரணம் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியது. அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் தெற்கின் ஆளுமைக்குரிய பிரதிநிதி ரனில் விக்ரமசிங்க என்றால் அதன் வடக்கு முகவர் சுமந்திரன் என்பதில் எந்தச் சந்தேகமும் எழ முடியாது.
தனது எதிர்கால வாக்குப் பலத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று தெரிந்திருந்தும் தனது எஜமான விசுவாசத்திற்காக சுமந்திரன் தன்னாலான அனைத்தையும் மேற்கொள்ளத் தயார் நிலையிலுள்ளார். பொது மேடைகளில் ஊடகங்கள் மீதும் மக்கள் மீதும் வன்மத்துடன் நடந்துகொள்வதிலிருந்து தன்னை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது வரைக்கும் சுமந்திரனின் ஜனநாயக மறுப்பு அவரது ஆதரவாளர்களையே விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் அரசியல் கோமாளி போன்று நடந்துகொள்ளும் சுமந்திரனின் மிரட்டல்களால் அச்சமடைந்தவர்களைவிட பலன்டைந்தவர்களே அதிகம்.
குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் பலர் தமது அரசியலுக்கான உள்ளூர் எதிரியைத் தேடிக்கொண்டிருந்தனர். அவ்வாறான எதிரிக்கு மென்மையான மாற்று ஒன்றே தாம் என மக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது, அதற்கு சுமந்திரன் என்ற கடைந்தெடுத்த கோமாளித்தனமான ஒருவர் வாய்த்திருப்பது தமிழ்த் தேசிய அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தும் பலருக்குப் பொன் முட்டையிடும் வாத்தாகிவிட்டது.
அந்தவகையில் சுமந்திரன் தனது எதிரிகளுக்கான ஊட்டச்சத்தை தானே வழங்கிவருகிறார்.
சுமந்திரனின் அரசியலுக்கு எதிரான பாராளுமன்ற வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பால் மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்படும் வரை சுமந்திரன் பிழைப்புவாதியாக வாழ்வதும், பிழைப்புவாதிகளுக்குப் பயன்பட்டுப்போவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.