தெற்காசிய நாடுகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் திட்டத்தின் நம்பிக்கையான முகவர்களில் சுமந்திரனும் ஒருவர். வழக்கறிஞரான சுமந்திரன் சம்பந்தனுக்கு பின்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கையகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியின் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவர எண்ணும் சுமந்திரன், அதிகாரவர்க்கத்திற்காகவும் அதன் பின்னணியில் செயற்படும் அமெரிக்க ஏகாதிபத்திய அணிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். மக்கள் நலன் என்பது சுமந்திரன் அரசியலில் கிஞ்சித்தும் கிடையாது.
தான் சார்ந்த ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்து நேரும் ஒவ்வொரு கணத்திலும் அதனைப் பாதுகாக்க ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபம் அதன் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி. இரண்டு வருடங்களின் முன்னர் ராஜபக்ச ஆட்சியில் வெலிவேரிய என்ற கிராமத்தில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரையோகம் நடத்தி அப்பாவிகளைக் கொன்று போட்டது. அதற்கு எதிராக இலங்கை முழுவதும் கொந்தளிக்கும் நிலை காணப்பட்டது. போராட்டங்கள் உருவாகும் நிலை காணப்பட்ட போது ஐ.நாவிலும், சர்வதேசத்திடமும் பேசி, போராட்டத்தை தீர்வு பெற்றுக்கொடுப்பதாக மக்களுக்குக் கூறி போராட்டங்களை ஒடுக்கி தனது அதிகாரவர்க விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்.
இலங்கையில் பேரினவாதத்தை வலுப்படுத்தும் அமெரிக்கத் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது அதனை நிபந்தனைகள் எதுவுமின்றி சுமந்திரன் ஆதரித்தார்.
இவ்வாறு கோட்ப்பாட்டு அடிப்படையிலேயே ஏகாதிபத்திய அடிமையாகச் சுமந்திரன் செயற்படும் அதேவேளை அதனை எதிர்கொள்ளும் கேள்விகள் எதுவும் ஈஸ்ட் ஹாம் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
சுமந்திரனை எதிர்கொண்டு கேள்விகளைக் கேட்பதற்கு என புலம்பெயர் அமைப்பு ஒன்று சில நபர்களை அனுப்பி வைத்திருந்தது.
வேடிக்கை என்னவென்றால் சுமந்திரனும் எதிர்த்தரப்பும் ஒரே கருத்தையே முன்வைத்தன. சுமந்திரன் அமெரிக்கா என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப் படுத்துவோம் என்கிறார். அதேவேளை எதிர்த்தரப்பு அமெரிக்காவிடம் சற்று அதிகமாகப் பெற்றுக்கொள்ள அழுது புலம்புவோம் என்கிறார்கள். ஆக, இந்த இரண்டு தரப்பிடமும் ஒரே அரசியல் தான் காணப்படுகிறது.
சுமந்திரன் மற்றும் அவருக்கு எதிர் என்ற கூறிக்கொள்ளும் தமிழ் அடிப்படைவாதிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் புதிய அணி ஒன்று உருவாகி வருகிறது. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான உலகின் பலம் மிக்க போராடும் சக்திகள் ஒரணியில் இணைந்து வருகின்றன. இவர்களிலிருந்து அன்னியப்பட்டு தமிழ்ப் பேசும் மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் தமிழ் அடிப்படைவாதிகளும் சுமந்திரனும் எதிர்கொள்ளப்பட வேண்டும். சுமந்திரனின் அதிகாரவர்க்க அரசியலை நிராகரித்து புதிய அடிப்படைவாத அதிகாரவர்க்க அரசியலை உருவாக்கினால் அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். விமரசன சுய விமர்சனங்களுக்கு ஊடாக மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்தால் மட்டுமே இந்த இரு தரப்பையும் எதிர்கொள்ள முடியும்.