Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுமந்திரனா கஜேந்திரகுமாரா? – யாருக்கு வாக்களிப்பது??

Kajendrakumar-Sumanthiranகொள்கையளவில் பொதுவாக வேறுபாடுகளற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் உட்பட மேலும் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வடக்குக் கிழக்கில் தேர்தல் சாக்கடையில் நீந்த ஆரம்பித்துள்ளன.

யாருக்கு வாக்களிப்பது என்ற விவாதங்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து கொழும்பு ஈறாக வட-கிழக்கு வரைக்கும் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.

இவர்களுக்கு மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரிக் கும்பல்களும் தேர்தல் சந்தையில் கடைவிரித்துள்ளன.

உலகம் முழுவதும் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கான நிர்வாகி ஒருவரை பாராளுமன்ற வசதிகளை அனுபவிப்பதற்காக ஒரு பகுதி மக்கள் தீர்மானிப்பதற்கான நிகழ்வாகும்.

தேர்தல் என்பது ஐந்து வருட காலத்திற்கு மக்களை போலி நம்பிக்கைகளுடன் காத்திருக்க வைக்கும் போலி ஜனநாயகம் அது தோன்றிய மேற்கு நாடுகளிலேயே காலாவதியாகிவிட்டது.

தேர்தல் என்பது ஜனநாயகமல்ல சர்வாதிகாரம் என்பதனால் தான் புதிய ஜனநாயக முறைமையை சோசலிச நாடுகள் அறிமுகப்படுத்தின. அங்கெல்லாம் மக்களின் அடிமட்டம் வரையான நேரடிப் பங்களிப்புடன் நடைபெற்ற தேர்தல் ஊடாக பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர். மேற்கு நாடுகளில் சிறுபான்மையினரின் ஆட்சியை முன்வைக்கும் பாராளுமன்ற ஜனநாயக முறையைச் சோசலிச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் சோசலிச நாடுகளின் தேர்தல் முறையைச் சர்வாதிகாரம் என மேற்கு நாடுகள் பிரச்சாரம் மேற்கொண்டன.

மன்னராட்சியின் கோரத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளின் தேசிய முதலாளிகள் சேர்ந்து அமைத்துக்கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமூகத்தின் தேவையாகவிருந்தது. இன்று அது காலாவதியாகிவிட்டது. பல்தேசியப் பெரு முதலாளிகள் தமது அடியாட்களை பிரதிநிதிகளாக நியமித்துக்கொள்ளும் சடங்கு பாராளுமன்றத் தேர்தலானது. சிறுபான்மையினரின் ஆட்சி ஜனநாயகம் என அழைக்கப்பட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால்தான் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் வடக்கில் திட்டமிட்டு நீரையும் நிலத்தையும் நஞ்சாக்கிய போது தமிழ் அரசியல் வாதிகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

கஜேந்திரகுமாரா சுமந்திரனா என்று மண்டையைப் பிசைந்துகொள்ளும் ஒவ்வொருவரும் இந்த இரண்டு நபர்களின் கொள்கைகளுக்கு இடையே குறைந்தது ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கட்டும் பார்க்கலாம்.
இவர்கள் இருவருக்கும் அண்மையில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டும் என்ற புள்ளியில் ஒன்றுபட்டார்கள். அமெரிக்க அரசை சரியாகக் கையாளவில்லை என ஒருவர் மற்றொருவரைத் தாக்கிக் கொண்டனர்.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அழிப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதை இவர்கள் உணராதவர்கள் அல்ல. மைத்திரி-ரனில் கூட்டாட்சியைத் தோற்றுவித்துத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்ட அமெரிக்க அரசு தனது நாட்டில் வைத்தே விக்னேஸ்வரனை ‘போர்க்குற்றம் குறித்துப் பேசவேண்டாம்’ மிரட்டியை அதே வேளை இவர்கள் அமெரிக்காவைக் கையாளலாம் என்கின்றனர்.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சுன்னாகம் நச்சு நீரால் யாழ்ப்பாணம் அழிக்கப்பட்ட போது இவர்கள் இருவருமே மூச்சுக் கூட விடவில்லை. இரண்டு பேருமே பாராளுமன்றம் சென்று தமிழர் பிரச்சனைகளை உலகிற்குத் தெரியப்படுத்தலாம் என்கின்றனர். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட போதுகூட உலகின் போராடும் மக்களுக்குத் தமிழர் பிரச்சனயைத் தெரியப்படுத்தி சுய நிர்ணைய உரிமைக்கான ஆதரவைப் போராடும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாமல் அவர்களை அன்னியப்படுத்திய அதே தலைமைகள் பாராளுமன்றத்திலிருந்து பேசப்போவது யாருக்காக?

மீண்டும் அவர்களின் எஜமானர்களான அமெரிக்காவிற்காகவும் இந்தியாவிற்காகவும் மட்டுமே.
கடந்த ஐந்துவருடங்களாகத தமிழர்களைக் கூட்டமைப்பு ஏமாற்றியது என்றால், மக்களில் பிரச்சனைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்டுள்ள கட்சிகள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஆக, பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்களை அணிதிரட்டும் பொறிமுறை ஒன்றை இன்றைய புதிய சமூகம் கண்டறிய வேண்டும். அடுத்த தேர்தலுக்குள் அழிப்பு அதன் புதிய பரிமாணத்தை அடைவதற்கு முன்பதாக புதிய அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கபடாவிட்டால் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் புதிய மீட்பர்களை பகலில் விளக்குப்ப் பிடித்துத் தேடவேண்டிய நிலை தோன்றும்.

Exit mobile version