Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் அரசியல் நண்பர்கள்

sumanthiranandgajanசுமந்திரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் குறிவைத்துப் புலம்பெயர் சில்லரை வியாபார ஊடகங்கள் தேர்தல் காலத் தாக்குதலை முன்னெடுக்கின்றன. சுமந்திரன் மீதான வெற்றுத் தாக்குதல்களை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளும் இந்த ஊடகங்கள், சுமந்திரன் பிரித்தானியாவில் அமெரிக்க அரச தன்னார்வ நிறுவனங்களுடனும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனும் ஒன்றுகூடல்களை நடத்திய போது மூச்சுக்கூட விடவில்லை.

சுமந்திரன் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் நேரடி முகவர். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் வன்னிப் படுகொலைகளை முடித்துக்கொண்ட பின்னர், இனச்சுத்திகரிப்பைத் தொடர்வதற்காக தமக்கான முகவர்களை நியமித்துக்கொண்டன. அந்த முகவர்களில் முதலாவது வரிசையில் சுமந்திரனை வகைப்படுத்தலாம். சுமந்திரனுக்கு எதிராக வெற்றுச் சுலோகங்களை முன்வைக்கும் கஜேந்திரகுமார் குழுவினர், குறிப்பாக அருவருக்கத்தக்க அவதூறுகளை முன்வைக்கும் புலம்பெயர் இணையங்கள், சுமந்திரன் ஏகாதிபத்திய நாடுகளின் அடியாள் படை என்ற பிரதான குற்றச்சாட்டை முன்வைக்க மறுக்கின்றனர்.

நான்கு தசாப்த மக்களதும் போராளிகள்தும் தியாகத்தை அமெரிக்க எசமானனுக்கு விலைபேசியவர் சுமந்திரன்.

இங்கு சுமந்திரன் மீதான வெளிப்படையாகத் தெரியும் குற்றச்சாட்டுக்கள் காணப்படும் போது அவை தொடர்பாகப் பேச மறுப்பதன் பின்னணி என்ன? சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தான்.

ஏகாதிபத்திய அடியாள் படைகளின் முன்வரிசையில் சுமந்திரனுடன் கஜேந்திரகுமாரும் அமர்ந்திருப்பது தான்.
கஜேந்திரகுமாரும் சுமந்திரனைப் போன்றே போர்க்குற்ற விசாரணையை சர்வதேசம் என்று அழைக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய அணி முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதையே தமது வாழ்நாள் அரசியலாக முன்வைக்கின்றனர்.

இந்த இருவருமே தமது தேர்தல் தேவைகளுக்கு ஏற்ப தமது சுலோகங்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனல் இருவரது அரசியலும் ஒன்று தான். அது மக்களுக்கானதல்ல.

நான்கு தசாப்தப் போராட்டத்தை யார் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முதலில் விற்பனை செய்வது என்பது மட்டுமே இருவருக்கும் இடையேயான ஒரே முரண்பாடு.

ஆக, ஏகாதிபத்திங்களுக்கு எதிரான தேசியவாத அரசியலை முன்வைப்பதற்கு தமிழர் தரப்பில் எந்தத் தலைமைகளும் இல்லை. இந்த வெற்றிடம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஏகாதிபத்திய அடிமைகளுமே இலங்கை அரச பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்கின்றன.

பேரினவாத அரசின் பாராளுமன்றத்தின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என மக்களுக்குப் போலி நம்பிக்கையை வழங்கி வருகின்றன. தமக்கு இடையில் எந்த முரண்பாடுகளுமற்ற இந்த இரு குழுக்களும் மக்களை மந்தைகளாக்குவதற்காக வெற்றுச் சுலோகங்களைக் கவர்ச்சிகரமாக முன்வைத்து தேர்தலில் வாக்களிகக் கோருகின்றன.

தேர்தலில் வாக்களிப்பது என்பது பிழைப்புவாதிகளுக்கு வாக்களிப்பதாகும்; இலங்கை அரச பாசிஸ்டுக்களின் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்வதாகும். மக்களை அரசியல் மயப்படுத்துவதும், உலக மக்களுக்கு இனப்படுகொலை அவலங்களைக் கூறுவதும் இன்று எமக்கு முன்னாலுள்ள அவசரத் தேவையாகும். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் அதனைப் புறக்கணிப்பதன் ஊடாகவே இதனைச் சாதிக்க முடியும்.

தேர்தலில் வாக்களிப்பது தேசியத்திற்கு எதிரானது!

Exit mobile version