பெரும்பாலான மைய அரசியல் வாதிகளின் பணி என்பது இறுக்கமான பாசிசத்தை நோக்கிய அதிகாரவர்க்க அமைப்பைக் கட்டமைப்பதே.
பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று தனது இசைக் கலையத்திற்குள் சென்றுகொண்டிருந்த கறுப்பின இளைஞரான மிஷேல் சக்லே என்பவரை முகக்கவசம் அணியாத மூன்று போலிஸ் அதிகாரிகள் எந்தக் காரணமும் இன்றிக் கோரமாகத் தாக்கிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒளி வாங்கியில் பதிவாகியிருந்தது. சமூகவலைத் தளங்களில் வெளியிடப்பட்ட இக் காணொளிகள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்த இம்மனுவல் மக்ரோன் இவ்வாறான நடவடிக்கைகளைஅனுமதிக்கமாட்டோம் எனக் கூறி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலிசாரை பணியிடை நீக்கம் செய்தார். அதன் மறுகணமே பணியிலிருக்கும் எந்த போலிசையும் படம் பிடிப்பதோ, அவற்றை வெளியிடுவதோ கிரிமினல் குற்றம் என்ற சட்டமூலத்தைக் கீழ் சபையில் நிறைவேற்றினார்.
பிரஞ்சு ஜனாதிபதியின் இந்த இரட்டை முகத்தால் கோபம் கொண்ட பிரான்சின் ஜனநாயக முற்போக்கு அணிகள் அவருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் 54 பொதுமக்கள் கலந்துகொண்டனர் என உள்துறை அமைச்சுக் கூறினாலும் இது பல மடங்கு அதிகமாகும் என ஊடகங்கள் கூறுகின்றன.
போராட்டக்காரர்களைத் தாக்க முற்பட்ட போலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த போலிஸ் தொழிற்சங்கத் தலைவரும் உயர் அதிகாரியுமான புரூனோ பாத்தோசெத்தி, இது போராட்டமல்ல நகர்புற வன்முறை என போலிஸ் வன்முறையை நியாயப்படுத்தினார். சனி, 05.12.2020 மோதலில் முற்றுப்பெற்ற போராட்டத்தின் பின்னர் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன.