நேற்று யாழ்ப்பாணம் முழுவதும் முடங்கிப் போயிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிரான ஒருமித்த குரல் வெளிப்பட்டது. இங்கு திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு குறியீடாக முன்வைத்து மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். கடந்தகாலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராடத்திற்கு எதிராகச் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் என்ற போர்க் குற்றவாளி மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் கடையடைப்பிற்கான கோரிக்கையை முன்வைத்த போதிலும், அரசிற்கு எதிரான எதிர்ப்புணர்வை இக் கோரிக்கையை ஒரு குறியீடாக்கி மக்கள் தெரிவித்தனர்.
இதே வேளை இலங்கை சிங்கள பௌத்த சோவனிச அரசின் அடிவருடியாகச் செயற்படும் கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சிசிர சிரிவர்தன தமிழர்களின் வர்த்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உட்பட இலங்கையின் குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவர்களை உருவாக்கும் பல்கலைக் கழகங்களில் ஒன்றான ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் அதிபரான இவரின் அருவருப்பான கருத்து சிங்கள பௌத்த அரச ஒடுக்குமுறையின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறான பல்கலைக் கழகங்களிலிருந்து மேற்கு நாடுகளை நோக்கி வரும் மாணவர்கள் தொடர்பாகவும் பல்கலைக் கழகம் தொடர்பாகவும் மேற்கு நாட்டுப் பல்க்லைக் கழகங்களுக்கு அறிவுறுத்துவது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சனநாயக செயற்பாட்டாளர்களின் கடமை.
இவ்வாறான சமூகவிரோதிகள் மருத்துவத் துறையிலிருந்து அகற்றப்பட வேண்டும். உலகம் இன்று மருத்துவத்தில் சிக்கலாக காலத்தில் தன்னை நகர்த்திக்கொள்ளும் சூழலில் இந்த விசக் கிருமிகள் தொடர்பாக உலக மருத்துவ சமூகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் .