Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்?

முதலில் திராவிடம், இடையில் கம்யூனிசம், தேவைப்பட்டால் நாஸிசம் என்று காலத்திற்குக் காலம் என்றல்ல கணத்திற்குக் கணம் தன்னை உருமாற்றிக்கொள்ளும் சீமான் கடந்தவாரம் மிக முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். ஈழப் பிரச்சனையை, அதிலும் கடந்த இனப்படுகொலையை, பிரபாகரன் போன்ற குறியீடுகளை தனது அரசியல் அடையாளமாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வாக்குத் திரட்டி முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறும் சீமான் தமிழீழம் பிடித்துத் தருவேன் என்று வேறு கூறிவருகிறார்.

வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை சுய நிர்ணைய உரிமைக்கு உட்பட்ட பகுதியாக ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து கூட்டாட்சி அமைப்பதா அன்றி எது நடந்தாலும் பிரிந்து செல்வதா என்பது ஒரு தேசிய இனத்தின் முடிவு. இல்லை தமிழீழம் என்ற பெயரில் பிரிந்து செல்வோம் என்பது சீமான் குழுவின் தனிப்பட்ட முடிவு.

இந்தியாவில் இந்துதுவ பாசிசம் போன்றே இலங்கையில் பேரினவாதம் என்பது ஒடுக்கும் தத்துவமாகவும் ஆட்சி அதிகாரத்தின் பின் புலத்தில் செயற்படும் கோட்பாடாகவும் காணப்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் என்றழைக்கப்படும் இக் கோட்பாடானது, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசிற்கு எதிரான போராட்டங்களை தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீது மடைமாற்றுவதற்கு பயன்பட்டது.

இதனையும் மீறி இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலிருது இரண்டு தடவை எழுந்தது. 1971 ஆம் ஆண்டும் 1987 முதல் 1989 ஆம் ஆண்டும் ஏற்பட்ட ஜே.வி.பி இயக்கத்தின் ஆயுதப் புரட்சி இலங்கை அரசாங்கங்களை ஆட்டம் காண வைத்திருந்தது.

இலங்கை அரசுகளின் இத் தந்திரோபாயத்தைப் புரிந்துகொண்டு குரலெழுப்பிய சிங்கள முற்போக்கு ஜனநாயக வாதிகள் இலங்கை அரசு படைகளால் அழிக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசு மேலும் பேரினவாதத்தை முன்வைத்து அரசியல் நடத்த முடியாத சூழல் உருவானது. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமாக நடத்த வேண்டிய அரசியல் சூழல் இன்றும் காணப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை என்றாலும் அப்போராட்டத்தை அங்குள்ள மக்கள் திட்டமிட்டு படி நிலை வளர்ச்சி ஊடாக நடத்த வேண்டும், அதற்காக அவர்கள் அங்குள்ள குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் சூழலைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இதனைச் சீமான் ஒருவகையில் உணர்ந்துள்ளது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் இப்படிக் கூறுகிறார்.

“கண்டபடி பதிவிடாதீர்கள், நாங்கள் எல்லாம் நக்சல்பாரிகளா, எங்கள் தலைவர் சாரு மஜும்தார் என்று அவன் பாட்டுக்கு பேசிட்டுப் போயிட்டன். உடனேயே சீமான் கட்சி நக்சல்பாரி இயக்கம் என எங்க அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகிறார்”

சாரு மஜும்தார் என்ற ஆயுதப் போராட்ட இயக்கத் தலைவரைப் போன்றவரே சீமான் என அவரது இயக்க உறுப்பினர் ஒருவர் பேசி யூ டியூப்பில் பதிவிட்டதற்கே இவ்வளவு அச்சப்படும் சீமான் ஈழம் தொடர்பாக என்ன பேசுகிறார்?

அடுத்த ஈழப் போர் தொடங்கும், தமிழீழத்தைப் பிடித்தே தீருவோம், இந்தியாவில் படை திரட்டி இலங்கைக்கு அனுப்புவோம், என்பதில் ஆரம்பித்து சிங்களப் பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உபடுத்துவேன், மார்பகங்களை அறுப்பேன் என்பது வரை பேசுகிறார்.
அரசியல் பாதுகாப்புள்ள சீமான் சாரு மம்ஜூதாருக்கு இவ்வளவு அச்சப்பட்டால், பேரினவாதம் இன்னும் கோலோச்சும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் எவ்வளவு அச்சப்பட வேண்டும்? அங்கு சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கடந்தகாலப் போராளிகள் எவ்வளவு அச்சப்படுவார்கள். தடுப்புக்குச் சென்றுவந்த போராளிகளின் நிலை?

இவை அனைத்திற்கும் அப்பால் இலங்கை அரசு தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் போதெல்லாம், சிங்கள மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அப்போதெல்லாம், தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தீவிரவாதம் இன்னும் நிலைகொண்டுள்ளது என இலங்கை அரசாங்கம் அவர்களது வாயை மூடிவிடுகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் தன்பக்கம் திருப்பிக்கொள்கிறது.
தவிர, பொழுது போக்கிற்காகவும், தம்மைத் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்வதற்காகவும், இன்னபிற பிழைப்புவாத நலன்களுக்காகவும் ஈழம் பிடிக்கப்போவதக உணர்ச்சி வசனம் பேசும் புலம்பெயர் தமிழர்களும் சீமானின் அறிவுரையை ஏற்பார்கள் என நம்புவோமாக.

சிறியளவிலான ஜனநாயக சூழலையும் இலங்கை அரசு இவர்களைக் காரணம் காட்டி மூடிவருகிறது. சீமன் உட்பட்டவர்கள் இலங்கையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி ஒரு அமைப்பின் நிறுவன வேலைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக அவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சூழலையும் சீர்குலைத்து இலங்கை அரசிற்கு சார்பான அரசியல் சூழலை ஏற்படுத்தத் துணை செல்கிறார்கள்.

இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தை ஈழத்தமிழர்கள் தமது எல்லைக்குளில்ருந்து முன்னெடுக்கும் வழிகள் அனைத்தையும் அடைத்துவிடுவதற்கு இவர்களின் உணர்ச்சிப் பேச்சுக்கள் தடையாக அமைந்துவிடுகின்றன. சாரு மம்ஜூதார் குறித்துப் பேசுவதால் தனக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகப் பேசும் சீமான், இனியாவது தான் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்துக் குறித்து உணர்ந்துகொள்வார் என நம்புவோமாக.

Exit mobile version