தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மாமனிதர் சாந்தன் அவர்களது இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரது புனித உடல் ஏ9 வீதி வழியாக பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதைகளுடன் எடுத்து வரப்பட்டு கரைச்சிப் பிரதேசசபை வளாகத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் பாடல்களைப் பாடி பிரபலமடைந்த சாந்தன், வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான பின்னர் மேடைக் கச்சேரிகளை நடத்திவந்த சாந்தன், ஈழத்து இசை பாரம்பரியத்தில் ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தார். தனது வசீகரமான குரலால் தென்னித்திய சினிமா இசையின் ஆக்கிரமிப்பைக் கடந்து சாந்தனின் குரல் ஈழத் தமிழ் மண்ணில் ஒலித்தது.
ஈ.பி.டி.பி இன் செயலாளர் டக்ளஸ் தேவாந்தாவைப் புகழ்ந்து சார்ந்தன் பாடிய பாடல் அக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலித்தது.
சாந்தனுக்கு, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனில் இயங்கும் புலம்பெயர் குழுக்கள் மாமனிதர் பட்டடத்தை வழங்கியுள்ளன. அதே வேளை முன்னை நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு எனக் கூறும் ‘ஜனநாயகப் போராளிகள்’ அமைப்பும் அவருக்குப் பட்டமளித்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன், பாடகர் சாந்தன் பிரபாகரனுக்கு அருகில் செயற்பட்டார் என்று கூறுகிறார்.
விடுதலைப் புலிகளின் பெயரால் அரசியல் வியாபாரம் நடத்தும் குழுக்களுக்கு சாந்தன் முன்னுதாரணமாக அமையாலாம். மக்களுக்கும் போராளிகளுக்கும் சாந்தன் முன்னுதாரணமாவது ஆபத்தானது. அதனைவிட சாந்தனின் மரணத்தை வர்த்தகப் பொருளாக்கும் மனிதர்களின் தொடர்ச்சியான அரசியல் இருப்பு ஆபத்தானது.