கருத்தின் மறுபக்கம் ஆபத்தான பின்புலத்தைக் கொண்டுள்ளது.
1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்து தனி நாடான போது பிரிவினைக்கு ஆதரவாகச் சுவீடிஷ் மக்களின் போராட்டங்களின்றி பிரிவினை சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். சுவீடிஷ் தொழிலாளர்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக நடத்திய போராட்டங்கள் நோர்வேயைத் தனி நாடாக்குவதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது.
பெரும்பான்மைப் பலமின்றி எந்த உரிமைப் போராட்டமும் வெற்றிபெற்றதாக வரலாறில்லை.
சம்பந்தன் சிங்கள மக்களின் ஆதரவுடனேயே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுவது உண்மையாயினும், அவர் சிங்கள மக்களாக யாரைக் கருதுகிறார் என்பதே இங்கு தொக்கி நிற்கும் வினா.
அப்பாவிச் சிங்கள மக்களையே பேரினவாத நச்சூட்டி ஒடுக்கும் பௌத்த சிங்கள பேரினவாத அரசின் பிடியில் அரசியல் நடத்தும் சம்பந்தன் சிங்கள மக்களுக்கும் எதிரானவரே. ஒடுக்கப்படும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை அரசிற்கு எதிரானவர்களே. சம்பந்தன் அக் கட்சிகளின் ஒன்றின் ஆட்சியில் அங்கம் போன்றே செயற்படுகின்றார். ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்கு இலங்கை அரசைப் போன்றே சம்பந்தனும் எதிரிதான்.
பெரும்பான்மை ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை எதிரிகளாக்க தமிழ் இனவாதிகளும், சம்பந்தன் போன்ற அதிகாரவர்க்க அடிவருடிகளும் தம்மாலான அனைத்தையும் செய்து முடிக்கின்றனர்.
இவர்களே தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தி பேரினவாதத்திற்கு உரமூட்டுகின்றனர்.
சம்பந்தனின் எதிரிகளாகக் காட்டிக்கொள்பவர்கள் தமிழ் இனவாதிகள். இந்த இரண்டு பகுதியினருமே தமக்குள் மோதிக்கொண்டாலும், அடிப்படையில் அவர்களின் அரசியல் ஒன்றே. அது பேரினவாதத்தை வளர்த்து பேரினவாதக் கட்சிகளைப் பலப்படுத்தும்.
ஆக, இனவாதிகளையும், அதிகாரவர்க்க அடிவருடிகளையும் நிராகரிக்கும் மக்கள் சார்ந்த புதிய தலைமை ஒன்றே இன்று தமிழ்ப் பேசும் மக்களின் அவசியமானதும் அவசரமானதுமான தேவை. இதுவரை அது வெற்றிடமாகவே காணப்படுகிறது.