Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து சந்திரகுமார் வெளியேறினார்!

santhirakumarஈ.பி.டி.பி கட்சியின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய சந்திரகுமார், கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் மீண்டும் இலங்கைக்குச் சென்றார்.

ஈ.பி.டி.பி கட்சி இணக்க அரசியல் என்ற தலையங்கத்தின் பேரினவாத அரசுகளுடன் இணைந்து செயற்பட்ட காலங்களில் அக்கட்சியின் தூண்களில் ஒன்றாகச் செயற்பட்ட சந்திரகுமார், வாக்கு வங்கி அரசியலைக் கருத்தில்கொண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

வடக்குக் கிழக்கில் இதுவரை கால இழப்புக்களும், தியாகங்களும் வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாகவும் புலபெயர் நாடுகளிலுள்ள பினாமிகளின் வியாபார உக்தியாகவும் பயன்படும் நிலையில் சந்திரகுமாரின் வெளியேற்றம் மற்றொரு அரசியல் தந்திரோபாயம்.

தனது வெளியேற்றம் குறித்துக் குறிப்பிட்ட சந்திரகுமார்,
“மக்களுடைய உணர்வுகளில் தமக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலைப்பாடு மிக நீண்டகாலமாகவே இருக்கிறது. இதில் எந்தச் சமரசத்துக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே, இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் சமூகங்களுக்கான சமத்துவ, பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனூடான சுயநிர்ணய அங்கீகாரத்தை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். பன்மைத்துவம் என்பது, இனங்களுக்கிடையே மட்டுமல்ல, இனங்களுக்கிடையே காணப்படும் சமூகக் கூறுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே உண்மையாகும். இந்த அடிப்படையில் சாதிய, பிரதேச, மத, பால்நிலை சமத்துவங்களையும் வேண்டி நிற்கின்றனர். இதனை அங்கீகரிக்கும் ஒரு சமூக நீதிக்கட்டமைப்புக்குள் மட்டுமே உண்மையான பன்மைத்துவமும் இனங்களுக்கிடையிலான பரஸ்பர அங்கீகாரமும் ஏற்படும். நலிவுற்ற மக்களுக்குரிய விசேட ஏற்பாடுகளும் நன்மைகளும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சூழலிலேயே பன்மைத்துவத்தின் ஊடான சமத்துவம் சாத்தியமாகும். இதுவே, சுய நிர்ணய உரிமையை அர்த்தமுடையதாக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் சமூக நீதியையும் உருவாக்குவதற்கான ஒரு சட்டவாட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைப்பது என்னுடைய இலக்காகும்.” என்கிறார்.

மேலும் கருத்துவெளியிட்ட அவர்,

என்னுடைய இளம் வயதில் (1980களில்) கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலை உணர்வு, என்னை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (ஈபிஆர்எல்எப்) இணைய வைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, தேசிய விடுதலைக்கான ஒரு போராளியாக, தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுக்கான விடுதலைப்படையின் உறுப்பினர் என்ற அளவிலேயே தன்னால் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்ததென குறிப்பிட்டுள்ளார்.

இங்கே, தேசிய விடுதலையுடன் இணைந்ததான சமூக விடுதலையின் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவே, தனது அரசியல் பாதையை தீர்மானிக்கும் அடிப்படையாக அமைந்தது என முருகேசு சந்திரகுமார் கூறியுள்ளார்.

தேசிய விடுதலைப்போராட்டத்தினுடைய நகர்வின் பரிமாணங்கள், பல்வேறு வகையாக மாற்றமடைகின்ற காலங்களில் இந்த அடிப்படையில் நின்றே தீர்மானங்களை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் வழிமுறையில் ஈடுபட்ட காரணத்தினால், நீண்டகாலம் ஆயுதப்போராட்டத்திலும் அதன் பின்னர் ஜனநாயக நீரோட்டத்திலும் தன்னுடைய தீர்மானங்கள் இருந்தன என தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையிலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,(ஈபிஆர்எல்எப்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) என்பவற்றில் தான் செயலாற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் என்னைத் தமது பிரதிநிதியாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது தடவையும் தெரிவு செய்தனர். இந்தக் காலகட்டத்தில் மிக மோசமான யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக்குள் சிக்குண்டு, ஏதுமற்றவர்களாக மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கை தன்னை மிகவும் பாதித்ததாக முருகேசு சந்திரகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த மக்களுடைய நலனுக்காகச் செயற்படுவது எனது தார்மீகப் பொறுப்பு என்பதை உணர்ந்து, கடந்த ஐந்து வருடங்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டு வரையறைக்குள் மிகக் கடினமாக இந்த மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பால் புதிய மாற்று அரசியலே இன்றைய அவசரத் தேவை. அதனை நிராகரிக்கும் சந்திரகுமாரின் அரசியல் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலின் மற்றொரு வடிவமாகவே அமையும்.

Exit mobile version