Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பூர் மின்னிலையத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமையின் பின்னணியில் அமெரிக்க கடற்படைத் தளம்?

ray-mabusசம்பூர் 500 MW அனல் மின் நிலையத்தை இந்திய அரசுடன் இணைந்து அமைக்கும் திட்டத்தை இலங்கையின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்திய அரசினதும் அது சார்ந்த அதிகாரவர்க்கத்தினதும் நலனுக்காக சம்பூர் என்ற அழகிய நகரையும் மக்களையும் அழிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்த செயல் வரவேற்கத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சாணியான சம்பந்தனின் முற்றத்தில் நடைபெறவிருந்த இந்த அநீதிக்கு எதிராக சம்பந்தனும் இன்று ஊசி விவகாரத்தை முன்வைத்து அரசியல் நடத்தும் எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை. எழுக தமிழா என்று போலித் தேசியம் பேசும் கும்பல்கள் சம்பூரில் நடைபெறவிருந்த அழிப்புத் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை.

2009 பின்னான அழிப்பு நடவடிக்கைகளான சுன்னாகம் நிலக்கீழ் நீர் தொடர்பாக பிரச்சனை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பாராளுமன்றக் கதிரைகளுக்காக அலையும் வாக்குப் பொறுக்கும் கும்பல்கள் எதுவும் குரல்கொடுத்ததில்லை.

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமையின் பின்புலத்தில் திருகோணமலையை அமெரிக்கக் கடற்படைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்படுகின்றன. நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை. தவிர, ரணில்-மைத்திரி ஆட்சி அமைந்த பின்னர், அமெரிக்காவின் ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருந்தமையும், இலங்கை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவத்தின் கூட்டு நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறுவதையும் காணலாம்.

ஆக, சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை நிராகரித்தமையின் பின்னணியில் அமெரிக்க இராணுவத் தளம் அமைப்பதே காரணமகவிருக்கலாம் என சந்தேகங்கள் எழுவது வழமையானது.

தமிழ் மண் அமெரிக்காவின் இராணுவ முகாமாகும் அபாயம் தொடர்பாக இதுவரை எந்த அரசியல்வாதியும், ஊடகங்களும் பேசியதில்லை. குறைந்தபட்சம் இது தொடர்பான உண்மையைத் தெளிவுபடுத்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை கூட முன்வைக்கவில்லை.

Exit mobile version