2009 பின்னான அழிப்பு நடவடிக்கைகளான சுன்னாகம் நிலக்கீழ் நீர் தொடர்பாக பிரச்சனை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பாராளுமன்றக் கதிரைகளுக்காக அலையும் வாக்குப் பொறுக்கும் கும்பல்கள் எதுவும் குரல்கொடுத்ததில்லை.
சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமையின் பின்புலத்தில் திருகோணமலையை அமெரிக்கக் கடற்படைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்படுகின்றன. நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை. தவிர, ரணில்-மைத்திரி ஆட்சி அமைந்த பின்னர், அமெரிக்காவின் ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருந்தமையும், இலங்கை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவத்தின் கூட்டு நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறுவதையும் காணலாம்.
ஆக, சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை நிராகரித்தமையின் பின்னணியில் அமெரிக்க இராணுவத் தளம் அமைப்பதே காரணமகவிருக்கலாம் என சந்தேகங்கள் எழுவது வழமையானது.
தமிழ் மண் அமெரிக்காவின் இராணுவ முகாமாகும் அபாயம் தொடர்பாக இதுவரை எந்த அரசியல்வாதியும், ஊடகங்களும் பேசியதில்லை. குறைந்தபட்சம் இது தொடர்பான உண்மையைத் தெளிவுபடுத்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை கூட முன்வைக்கவில்லை.