நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
மக்கள் அரச வன்முறைகளிலிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தாங்கினால் அது வன்முறையல்ல என்பது சம்பந்தனின் அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியலுக்குத் தெரியாத ஒன்றே. பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் அரச படைகளின் வன்முறைகளால் அழிக்கப்பட்ட போதே மக்கள் அதனை எதிர்கொள்ள முற்பட்டனர். ஆக, அரச படைகளின் வன்முறையை நிராகரித்து மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை என அடையாளப்படுத்தும் சம்பந்தனின் இக் கூற்று மக்கள் மீதான வன்முறை.
படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று, விமர்சனம் சுய விமரசனம் என்ற வழிமுறைகள் ஊடாக நகர்ந்து சென்ற மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை கலந்த அன்னியர்களின் தாக்குதலாக மாற்றியதில் சம்பந்தன் சார்ந்த கட்சிகே பிரதான பங்குண்டு.
1982 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் இராணுவப் பிரிவான தமிழ்த் தேசிய இராணுவம் என்ற அமைப்பே இந்திய அரசிடம் முதலில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டது. வடக்குக் கிழக்கிலிருந்து சில இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு தென்னிந்தியாவிற்கு சம்பந்தனின் கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவரது கட்சியின் ஆரம்ப கர்த்தாவான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் புதல்வரான சந்திரகாசன் இந்திய அரசுடன் இராணுவப் பயிற்சிக்காகப் பேச்சு நடத்தியன் பலனாகவே இளைஞர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்கள் நடத்திய தற்காப்பு யுத்தத்தை அன்னிய நாட்டின் வன்முறை யுத்தமாக மாற்றியமைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு சம்பந்தன் சார்ந்த தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே முதலில் துணை சென்றன.
தமிழரசுக் கட்சியால் இந்திய அரசு எதிர்பார்த்த அளவு இளைஞர்களித் திரட்ட இயலாமல் போன நிலையில், இராணுவப் பயிற்சி ஏனைய அமைப்புக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு ஆகிய இயகங்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்திய அரசின் தலையீடே ஈழப் போராட்டத்தில் வன்முறையை அறிமுகப்படுத்தி அதன் பரிணாம வளர்ச்சியை அழித்து, மக்களை விட ஆயுதங்களை வலுவுள்ளதாக மாற்றியது.
இன்றைய அவலத்திற்கு வித்திட்ட அந்த வன்முறையை சம்பந்தன் சார்ந்த கட்சியும் அதன் அரசியலுமே ஆரம்பித்து வைத்தது.
ஆக, வன்முறையை இனி ஆதரிக்க முடியாது என சம்பந்தன் கூறுவது உண்மயானால், அவர் இந்தியாவை இனி ஆதரிக்க முடியாது. இந்தியா ஆரம்பித்த வன்முறையை மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இந்திய அரச படைகள் வட கிழக்கை ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலியெடுத்துவிட்டு அதே மண்ணில் அகிம்சை தினத்தை நடத்தும் போது வன்முறையை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் அங்கு அகிம்சைக்காக உரையாற்றுவது வேடிக்கையானது.