Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரியாவில் அமெரிக்காவின் தோல்வி அதன் ஏகபோகத் தகமையை இரத்துச் செய்துள்ளது

syriasஅமெரிக்கவை இனிமேல் ஜனநாயக நாடாகக் கருத முடியாது என முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு உள்ளாகவே சிரியாவில் ரஷ்ய விமானங்கள் ஐ.எஸ்.ஐ.ஏஸ் நிலைகளின் மீது குண்டு வீச ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவின் ‘மனிதாபிமான’ முகம் எனக் கருதப்பட்ட அந்த நாட்டின் முன்னை நாள் ஜனாதிபதி சீ.ஐ.ஏ இன் சிலந்தி வலைக்குள் இருந்துகொண்டேஅந்த நாட்டைக் குறித்து அறிவித்த தகவல்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் தலையில் குண்டு பொழிந்தது.

அடிப்படையில் அமெரிக்கா எப்போதுமே ஜனநாயக நாடாக இருந்ததில்லை. அரச பயங்கரவாதத்தின் ஊற்று அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது.

மத்திய கிழக்கின் 88 வீதமான மக்கள் அமெரிக்காவை எதிரியாகவே எண்ணுகின்றனர் என்ற கருத்துக்கணிப்புக் கூறுகின்றது. மத்திய கிழக்கின் சர்வாதிகாரிகளை வெளியேற்ற அமெரிக்காவை நம்பியிருந்த மக்களுக்கு வரலாற்றின் ஓட்டத்தில் புதிய அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.

அமெரிக்கா தமது அன்றாட வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது எனப் பெரும்பாலான மத்தியகிழக்கு மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

மத்திய கிழக்கின் சாமனிய மனிதன் அமெரிக்காவையும் அதன் ஏகாதிபத்திய அணியையும் எதிரிகளாகக் கருதும் சூழலை ரஷ்யா பயன்படுத்திக்கொண்டது.

இதன் மறு பக்கமே சிரியாவில் ரஷ்யப்படைகளின் குண்டு மழை!

ரஷ்யாவின் இந்த நகர்வு மத்திய கிழக்கில் புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நோக்கம் ஐ.எஸ்.ஐ.ஏஸ் அமைப்பை அழிப்பது அல்ல, மாறாக சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தை தனது அடியாள் ஒருவரின் ஊடாகப் பிரதியிடுவதே என்பதை சிரிய மக்களையும், மத்திய கிழக்கின் ஒவ்வொரு குடிமகனையும் உணர வைத்துள்ளது.

ரஷ்யாவை பொறுத்தவரைக்கும் இது மாபெரும் அரசியல் வெற்றியாகும்.

82 வீதமான சிரியர்கள் அமெரிகாவும் அன்னிய நாடுகளும் இணைந்து உருவாக்கிய அமைப்பே ஐ.எஸ்.ஐ.எஸ் எனக் கருதுகின்றனர்.

சதாம் ஹுசைனை வெளியேற்றிய அமெரிக்கா இன்று வரைக்கும் அந்த நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா ஏற்படுத்திய இரத்த ஆறு தணிவதற்கு முன்னரே லிபியாவில் அது பெருக்கெடுத்து மடைதிறந்து பாய ஆரம்பித்திருக்கிறது. லிபிய சர்வாதிகாரி கடாபியை நடுத் தெருவில் கொன்று போட்டுவிட்டு அமெரிக்கா உருவாக்கிய ஜனநாயகம் அந்த நாட்டைக் கொள்ளைக் கூட்டங்களின் யுத்த களமாக மாற்றியுள்ளது.

இவை அனைத்தும் உருவாக்கிய அகதிகள் ஐரோப்பாவின் எல்லைப் புறங்களில் அவலத்தின் குறியீடாக எழுந்து நிற்கிறார்கள்.

ஆக, இன்று அமெரிக்காவை ஆதரிப்பதற்கு மத்திய கிழக்கில் மனிதர்கள் யாரையும் தேடிப்பிடிக்கக் கூட முடியாது.

சமூக விரோதிகளும், கொள்ளைக் கும்பல்களும், பல்தேசிய வியாபாரத் திருடர்களும் மட்டுமே அமெரிக்காவின் நண்பர்கள் என்ற நிலை தோன்றி விட்டது.

இவ்வாறான சூழலில் ரஷ்யாவின் விமானங்களை சிரிய மக்கள் வரவேற்கிறார்கள். சனல் 4 இன் ஆவணம் சிரிய மக்களின் மன உணர்வைப் படம்பிடித்துக்காட்டியது.
சிரியாவை ரஷ்யா ஒரு போதும் அமெரிக்க அதிகாரத்திற்கு விட்டுக்கொடுக்க அனுமதிக்காது. அதற்கான அடிப்படைக் காரணங்கள்:

– பனிப் போர்க் காலத்திலிருந்து ரஷ்ய ஆயுதங்களதும் இராணுவ வளத்தினதும் மத்திய கிழக்கு விற்பனை மையமாக சிரியா திகழ்கிறது.

– பனிப்போர் காலத்தின் பின்னர் ரஷ்யாவிற்கு வெளியிலுள்ள இராணுவ நிலை சிரியாவிலுள்ள ரஷ்ய கடற்படைத் தளம் மட்டுமே.

– மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சமநிலைப் படுத்தும் பிரதான நாடாக ரஷ்யா மாறுமானால் அப் பிரதேசத்தில் ரஷ்யா மாபெரும் சக்தியாக வளர்ச்சி பெறும்/

– உக்ரேயினில் தோற்றுப் போகும் அமெரிக்க ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு சிரியத் தலையீடு உந்து சக்தியாகும்.

– சோசலிசம் அழிக்கப்பட்ட ரஷ்யாவில் மரபு வழித் திருச்சபை அரச அதிகாரத்தின் பங்கு தாரராக மாறியுள்ளது. சிரியாவிலும் மத்திய கிழக்கிலுமுள்ள கிறீஸ்தவர்களைப் பாதுகாக்கும் முழக்கம் ரஷ்ய அதிகாரவர்க்கத்தின் கீழ் மக்களை அணிதிரட்டும் பணிக்கு சிரியத் தலையீடு அவசியமானது.

எது எவ்வாறாயினும் மத்திய கிழக்கில் தனது ஏகபோக அதிகாரத்தை அமெரிக்கா இழந்துவிட்டது. உலகின் அனைத்துப் பல்தேசிய நிறுவனங்களின் ஊடகங்களும் இணைந்து நடத்தும் ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரங்களை மக்கள் நம்பத் தயாராகவில்லை.

ஆக, சிரியாவில் அமெரிக்காவின் தோல்வி அதன் ஏகபோகத் தகமையை இரத்துச் செய்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியிலிருந்து மக்கள் விடுபடும் போது அது ரஷ்யா போன்ற மற்றொரு நாட்டின் ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படக் கூடாது என்றால் மக்கள் போராடுவது மட்டுமே இறுதி வழியாகும்.

http://www.huffingtonpost.com/eric-zuesse/jimmy-carter-is-correct-t_b_7922788.html

 

Exit mobile version