ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரண்டு வருடங்கள் நடைபெறும் பேச்சுக்களின் பின்னரே, வெளியேற்றம் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும். ஆயினும் வாக்களிப்பின் பின்னர் பிரித்தானியாவின் பங்குச் சந்தைப் பெறுமானங்கள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியது. நாணயத்தின் பெறுமதி பல மடங்கு குறைவடைந்தது. வங்கிகள், பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து வெளியேற்றத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. தனிச் சந்தை என்ற ஐரோப்பிய ஒன்றிய கோட்பாட்டை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசியல் மட்டத்தில் தோன்றின.
இதன் மறுபக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின், தொழிலாளர் விரோத பாசிசப் போக்கிற்கு எதிரான அரசியலை திசைதிருப்பி, குடிவரவாளர்களே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணமாக முன்வைக்கப்பட்டனர். அந்த அரசியலை நிறவாதக் கட்சிகள் தலைமைதாங்கின. ஆக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நியாயபூர்வமான காரணங்கள் மறைக்கப்பட்டு, சமூக விரோதிகளின் பிடியில் அதற்கான நியாயம் உள்வாங்கப்பட்டு அழிக்கப்பட்டது.
குடிவரவாளர்கள் தொடர்பான அச்சம் ஏற்படுத்தப்பட்டு பிரிந்து செல்வதே நியாயமானது என்ற கருத்து மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது. அதன் மறுபக்கத்தில் வெளியேறினால் நிறவாதிகளும் இனவாதிகளும் அதிகாரத்தைக் கையகப்படுத்தலாம் என்ற அச்ச உணர்வில் பல ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வழமை போலவே, முதலாளித்துவப் போலி ஜனநாயகத்தின் அடிப்படையில் வெறும் 4 வீத வாக்குகள் வித்தியாசத்தில் பிரித்தானியாவில் வாழும் மக்களில் அரைவாசிப் பகுதியினரின் விருப்பிற்கு எதிராக பிரிந்து செல்வது என்ற வாக்களிப்பு வெற்றிபெற்றது. இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகவிரோதப் போக்கு மூடி மறைக்கப்பட்டு நிறவாதம் மற்றும் இனவாதத்திற்கும் ஜனநாயகவாதிகளுக்கும் எதிரான போட்டியாக தேர்தல் கருதப்பட்டது.
தேர்தலின் பின்னர், அதிகாரவர்க்கம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைத்து வருகிறது. பிரித்தானியா என்ற கூட்டு அழிந்துவிடும் என்பதாலும்,. பொருளாதாரம் சிதைந்துவிடும் என்பதாலும் ஐரோப்பிய ஒன்றித்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தில் பரப்பப்படுகிறது.
உலகப் பொருளாதாரச் தவிர்க்க முடியாத சரிவின் வெளிப்பாடாக முதலாளித்துவ உள் முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. அதிகாரவர்க்க முன்னெப்போதும் இல்லாதவாறு பலவீனமடைந்து வருகின்றது. மக்களுக்கு உண்மை மறைக்கப்படுவதால் அவர்கள் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தினதும் மறுபக்கத்தில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என நேற்று லண்டனில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப் பேரணியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான பதாகைகளைக் காணக்கூடியதாகவிருந்தது. மார்க் தோமாஸ் என்ற நடிகரால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருபோம் என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. மிக நீண்ட வருடங்களின் பின்னர் லண்டனில் நடைபெற்ற மாபெரும் பேரணியாக இதனைக் கருதலாம்.
மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை தவறான அரசியல் தலைமை தாங்கும் போது அதிகாரவர்க்கமே முடிவில் பலனடையும் என்பதற்கான மற்றொரு உதாரணம் இன்றைய பிரித்தானிய அரசியலிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.