Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நாவில் தமிழீழக் கோரிக்கை : புதிய வியாபாரம் ஆரம்பம்

keep-calmஇதுவரைக்கும் போர்க்குற்ற விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பம் உட்பட அனைத்து போர்க்குற்றவாளிகளையும் ஐ.நா இன் துணையுடன் தண்டிக்கப் போவதாக மக்களை ஏமாற்றிய புலம்பெயர் குழுக்களுக்கு புதிய வழி ஒன்று கிடைத்துள்ளது. தமிழீழம் பிடித்துத் தருவதாக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப் போவதாகவும் பிரேரணை கொண்டுவரப் போவதாகவும் புதிய அதிரடி யோசனையுடன் கிளம்பியுள்ள குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தலைமை வகிக்கிறார். இன்னும் ஈழ வியாபாரம் தாராளமாகப் பணம் புரளும் நடவடிக்கை ஒன்று என்பதற்கான குறியீடுகளில் இதுவும் ஒன்று.

இன்னும் சில வருடங்களைக் கடத்தி முழுமையாக தமிழ்ப் பேசும் மக்களைப் பாதாளத்திற்குள் தள்ளுவதற்கான ஆரம்ப நடவடிக்கை போன்று தென்படும் இதற்கு தமிழ் இணைய ஊடகங்கள் சிறப்பு முக்கியத்துவம் வழங்கியுள்ளன.

மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் ஐ.நாவிற்கான பிரேரணையைத் தயாரித்துள்ளதாகவும், இதற்கு அமெரிக்காவின் முன்னைநாள் சட்டத்துறை ஆலோசகர் உதவியுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் பிரிவினையைத் தடைசெய்யும் ஆறாவது திருத்தச்சட்டம் தமிழீழம் பெற்றுக்கொள்ள தடையாகவிருப்பதாகவும், அதனால் முதலில் அச்சட்டத்தை அகற்ற கோரி ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாகவும் இக் குழு கூறிவருகிறது.

இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையைத் தடை செய்ய முடியாது என்பது இக் குழுவினருக்குத் தெரியாததல்ல. இலங்கையில் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கையையயும் அதற்கான நியாயத்தையும் முன்வைத்து சிங்கள தமிழ் மக்களை அணிதிரட்டினாலே பேரினவாதம் பலமிழக்கும். அதுவே தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான முதல்படியாக அமையும்.

இன்றைய அரசியல் சூழலில் தமிழீழ அரசை அமைப்பதற்காக இக் குழுக்கள் முன்வைக்கும் கோரிக்கையானது பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடவேண்டிய தேசிய இனத்தை பிரிவினைவாதிகளாக உலகத்தின் முன்னிலையில் முன்னிறுத்தும் செயற்பாடாகும். தென்னிந்திய பிழைப்புவாதிகள், அமெரிக்க ஏகாதிபத்திய அடியாட்கள் மற்றும் புலம்பெயர் குழுக்கள் இணைந்து நடத்தும் இந்தக் காட்டிக்கொடுப்பு நடவடிக்கையின் மறுபக்கத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் புதிய தந்திரோபாயங்கள் வகுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் தோன்றுகின்றன.

Exit mobile version