மத்திய கிழக்கில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தத்தில் சிக்குண்டு லட்சக்கணக்கில் அகதிகள் தற்காலிக பாதுகாப்பு நிலைகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். அகதிகளின் இடப் பெயர்வில் ஆயிரக்கணக்கானோர் குழந்தைகளும் பெண்களுமாக அழிந்து மடிகின்றனர்.
உத்தியோகபூர்வ கணக்குகளின்படி, ஏப்ரல் 10 மற்றும் 13க்கு இடையில் மட்டும் குறைந்தபட்சம் 450 குழந்தைகள் உட்பட, மத்தியத்தரைக்கடலைக் கடக்க முயன்ற 8,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையினர் லிபியா, சிரியா மற்றும் ஆபிரிக்காவின் போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்தவர்களாவர்.
2011 இல் அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2014 வரையில், லிபியாவின் ஆறு மில்லியன் மக்களில் இரண்டு மில்லியன் பேர் அந்நாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர்.
சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடந்த மேற்கத்திய-தலைமையிலான யுத்தம், அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்ததுடன், அந்நாட்டிலிருந்து வெளியேற நான்கு மில்லியன் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.
ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இப்போது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும், ஏமன் வரையில் போர்களத்தை விரிவாக்கி வருகின்றன. இந்த ஏகாதிபத்திய போர்வெறி, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பெரும் அளவிலான அகதிகளை அவர்களது சொந்த நாட்டை விட்டு துரத்தியடித்துள்ளது.
ஐரோப்பிய அமெரிக்க அணிகளால் உருவாக்கப்படும் அகதிகள் தப்பி ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தால் அங்கு அவர்கள் மீது நிறவாதிகளும் ஐரோப்பியப் பிற்போக்குத் தேசியவாதிகளும் உளவியல் யுத்தம் ஒன்றையே கட்டவிழ்த்துவிடுகின்றனர்.
பல்தேசிய இலாப வெறிக்காக உலகம் முழுவதும் நடத்தப்படும் யுத்தங்கள் உலகை மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாக மாற்றி வருகிறது. உலகிலுள்ள ஒரு வீதமான பணம் படைத்தவர்களுக்காக ஏனைய 99 வீதமானவரகள் பந்தாடப்படுகின்றனர்.