Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

நீதிபதிகள் குழுவினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய திரு.ஐங்கரநேசன் மறுபடியும் சுற்றவாளி போல நாடகமாடி விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எனது பெயரையும் குறிப்பிட்டு நீதிமன்ற படியேறப்போவதாக தெரிவித்திருப்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சி ஆகும். உண்மையில் விசாரணைக் குழுவை ஏற்றுக் கொள்ள முடியாது இருந்தால் ஆரம்பத்திலேயே விசாரணையில் பங்குபற்றாது அதை நிராகரித்து இருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் எதிர்ப்புடன் தனது விளக்கத்தை (statement under protest) வழங்கி இருக்கவேண்டும்.

முதலில் விசாரணைக் குழுவை ஏற்றுக்கொண்டு தனது பசப்பு வார்த்தைகளினால் ஏமாற்ற முயன்று சாட்சியங்களினால் இவரது விளக்கங்கள் பச்சைப் பொய்கள் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு எதிராக வந்ததும் கேவலமான வார்த்தைகளினால் விசாரணைக் குழுவில் இருந்த மரியாதைக்குரிய நீதியரசர்களையும் ஏனைய உறுப்பினர்களையும் மாகாண சபையிலும் ஏனைய பொது இடங்களிலும் அவர்களை தனிப்பட்ட முறையில் திட்டுவதும் சோரம் போனவர்கள் என்று மிக கேவலமாக வர்ணிப்பதும் அநாகரிகமான செயல்கள் ஆகும். சுண்ணாகம் நீர் மாசடைதல் விடயத்தில் இவர் பல்தேசியக் கம்பெனியை காப்பாற்றுவதற்காக அதிகார துஷ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டு போலி நிபுணர் குழுவை அமைத்து பொய் அறிக்கையை வெளியிட்டு அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் மாசடைந்த நீரை பருகுவதற்கும் அதன் மூலமாக தமிழினத்தை அழிப்பதற்கும் முயன்றது இப்போது தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த நிரூபணமான உண்மையை உறுதி படுத்துவதற்காக திரு ஐங்கரநேசனின் சவாலை ஏற்றுக் கொள்வதோடு ஏற்கெனவே மல்லாகம் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குக்கு முரண்படாத வகையில் எந்த நீதிமன்றத்திலும் சந்திப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் பகிரங்க விவாதத்துக்கோ தயாராக உள்ளேன் என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத் தருகிறேன்.

வட மாகாண சபை ஊழல் விவகாரத்தில் உண்மையான நீதி நிலைநாட்டப் படவேண்டுமானால் அமைச்சர் பதவியை தியாகம் செய்யும் கண்துடைப்புக்களை விடுத்து நேர்மையான வெளிப்படையான விசாரணையை நடாத்தி முறைகேடுகளையும், நிதி மோசடிகளையும் மக்களுக்கு வெளிப்படுத்தி மக்களின் அபிவிருத்திக்கான சூறையாடப்பட்ட நிதியை வசூலிப்பற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அமைச்சுக்களின் கீழ் முறையாகக் கணக்குக்காட்டப்படாத ஆவணங்கள் பரிசீலனை செய்யப்படுவதுடன் தனி நபர்களின் வருமான மூலங்கள், சொத்துக்கள் பற்றிய விபரங்கள் விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும். மனு நீதி கண்ட சோழன் காலத்தில் பாதிக்கப்பட்ட பசுவுக்கே முறைப்பாடு செய்யக்கூடிய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது போல் மாகாண சபை உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட குற்றச் சாட்டுகளை மட்டும் விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களும் முறைப்பாடு செய்யக்கூடிய பொறிமுறை வடமாகாண சபையில் ஏற்படுத்தப் படவேண்டும். திரு ஐங்கரநேசன் செய்த நிதி மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான விபரங்கள் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவினரிடம் (FCID ) ஒப்படைக்கப்படுவதோடு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு மோசடி செய்த நிதி மீள பெறப்பட்டு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும்.

மேலும் நல்லாட்சிக்கான அரசாங்கம் ஊழலை ஒழிப்பதற்காகவும் வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காகவும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சொத்துக்களை கட்டாயமாக வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த வேளையில் நான் திரு ஐங்கரநேசனுக்கும் அவரது முன்னாள் அமைச்சரவை சாகாக்களுக்கும் ஒரு பதில் சவாலை விடுக்க விரும்புகிறேன். கடந்த 24 வருடங்களாக வைத்தியராகவும் வைத்திய நிபுணராகவும் எந்த சந்தர்ப்பத்திலும் கையூட்டு பெறாமலும் அதிகார துஷ்ப்பிரயோகத்தில் ஈடுபடாமலும் நேர்வழியில் அரசாங்க ஊதியம், விரிவுரையாளர் கொடுப்பனவு மற்றும் தனியார்துறையில் சேவை மூலமாக பெற்றுக் கொண்ட பணத்தில் நான் சேர்த்த எனது சொத்துக்களையும் சேமிப்புகளையும் வெளிப்படுத்த தயாராக உள்ளேன். அதுபோல் எனது சவாலை ஏற்று நீங்கள் நாலு பேரும் உண்மையில் ஊழலில் ஈடுபடாத சுற்றவாளிகள் என்றால் உங்களுடைய சொத்து விபரங்களை வெளியிட தயாரா ? வெளியிட முடியாவிட்டால் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் ஊழலில் ஈடுபட்டதை நேர்மையாக ஏற்றுக் கொண்டு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் பொது வாழ்க்கையில் இருந்தும் முற்றாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

Exit mobile version