Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவின் எழுச்சியும் புலம்பெயர் கும்பல்களின் பிழைப்பும்

rajapaksaமைத்திரி – ரனில் அரசைக் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருப்பதற்கும் இலங்கையில் பேரினவாதச் சூழலைப் பேணும் தேவை இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் அதன் ஏவலாளிகளான மேற்கு ஏகாதிபத்தியங்களும் ஒரு எல்லை வரைக்கும் தேவையுண்டு. காலனியத்திற்குப் பின்னான இலங்கையில் வரலாறு முழுவதும் அரசிற்கு எதிரான போராட்டங்களின் வரலாறே. ஜே.வி.பி இன் ஆயுத எழுச்சியை இலங்கை இரண்டு தடவை சந்தித்திருக்கிறது. மீண்டும் இவ்வாறான எழுச்சிகள் தோன்றுமானால் அவற்றைப் பேரினவாதத்தினால் மட்டுமே முறியடிக்க முடியும்.

அடிப்படையில் இலங்கை அரசமைப்பையும் அது சார்ந்த அதிகாரவர்க்கத்தையும் பாதுகாப்பதற்கு பேரினவாதம் அவசியமாகிறது. இப் பேரினவாதத்தைப் பாதுகாப்பதற்கு இன்று தமிழ் இனவாதமும் அவசியமாகிறது. இலங்கையில் பேரினவாதத்தின் பிரதிநிதியாக மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதத்தின் பிரதிநிதிகளாக புலம்பெயர் பினாமி அமைப்புக்களுமே செயற்படுகின்றன.

இந்த இரண்டு தரப்பையும் மையமாகவைத்து ஊடகங்கள், தனிநபர்கள், உள்ளூர் வெளியூர் பினாமிகள், வெளியீடுகள் போன்ற மிகப்பெரும் வலையம் ஒன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் கைது நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்து மகிந்த குழுவின் எழுச்சி என்பவை தற்செயலானதல்ல. இன்று புலம்பெடர் புலிகள் மகிந்தவைத் தற்கொலைத் தாக்குதலில் கொலைசெய்யச் சதித்திட்டம் தீட்டுகின்றனர் என்ற செய்தி கொழும்பு ஊடகங்களைஆக்கிரமித்துள்ளது.

இதன் மறுபுறத்தில் மகிந்த ராஜபக்சவின் எழுச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் சந்தேகத்திற்குரிய புலம்பெயர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. புலம்பெயர் நாடுகளில் புலிகள் இயக்கத் தலைவர்களைக் கைதுசெய்ய இலங்கை அரசு புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி வைத்திருப்பதாகப் பரபரப்புச் செய்தி வெளியானது.

புலம்பெயர் நாடுகளில் தமது அரசியல் பிழைப்பை நடத்துவதற்கு இக் குழுக்கள் போர்க்குற்ற விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பத்தைத் தண்டிக்கப்போவதாகக் கூறிவந்தன. அதற்காக அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் தாஜா செய்து வருவதாகவும் கூறிவந்தன. இதற்கும் மேலாக சில அமைப்புக்கள் தமிழீழம் பிடித்துத் தருவதாக வேறு கூறி வந்தன. இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்த அரசு நிறுவப்பட்டதும் புலம்பெயர் ஏமாற்று வித்தை பிசுபிசுத்துப் போய்விட்டது. இந்த நிலையில் இலங்கையில் ஏதாவது ஒரு வகையில் தலையிடுவதாக புலம்பெயர் மக்களுக்குக் கூறுவதன் ஊடாகவே இந்த அமைப்புக்கள் அரசியல் பிழைப்பு நடத்த முடியும் என்றாகிவிட்டது.

அதனால் இலங்கையில் பேரினவாத சக்திகளால் தூண்டப்ப்படும் சம்பவங்களின் பின்னால் தாமே செயற்படுவதாக புலம்பெயர் குழுக்களும் தனி நபர்களும் ஒரு மாயையை ஏற்படுத்திவருகின்றனர். இவர்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பத்துடன் நேரடி உறவுகளைப் பேணி வருபவர்கள் காணப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.

தவிர, புலியெதிர்ப்பு அரச சார்புக் கும்பல்கள் இன்று புலம்பெயர் நாடுகளிலிருக்கும் குழுக்களின் நேரடித் தலையீட்டாலேயே இக் கைதுகள் நடைபெறுவதாக ராஜபக்ச ஆதரவாளர்களின் பக்கம் சாய்ந்துகொள்கின்றனர்.

எது எவ்வாறாயினும் ராஜபக்சவின் மீட்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பை புலம்பெயர் குழுக்கள் வழங்கி வருகின்றன.

போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாகவும், தமிழீழம் பிடித்துத் தருவதாகவும் இதுவரை மக்களை ஏமாற்றிய இக்குழுக்கள் போராட்டத்தின் மீழெழுச்சியை தற்காலிகமாகத் தடுத்தன.

நினைவு தினங்களை நடத்தியே பழக்கப்பட்டுப்போன இக் குழுக்கள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தோண்டியெடுத்து பெரும் பணச்செலவில் நினைவு தினம் கொண்டாட ஆரம்பித்துள்ளன. புலிகள் இயக்கத்திலிருந்த போராளிகள் தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் போல அலையும் போது வட்டிக்கோட்டையும் மாவீரர் தினமும் அவர்களின் பெயரால் பிழைப்பு நடத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் இப் பிழைப்பின் உள்ளூர்ப் பினாமிகளாகச் செயற்படும் ஒவ்வொரு தனிமனிதர்களும் கட்சிகளும் இந்த உண்மையை அறிந்துகொள்வது அவசியமானது.

Exit mobile version