சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெறும் இனவாதமாக மாற்றிச் சிதைப்பது தான் இவர்களின் நோக்கம் என பொதுவாக நம்பப்பட்டது. புலம்பெயர் நாடுகளிலிருந்த தமிழினவாதிகளின் நிலைமையும் இதுவே. அந்த நாடுகளின் உளவுத் துறைகளதும், அரசுகளதும் ஆதரவுடனேயே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இனவாதம் போன்று மாற்றப்பட்டது.
அதிகாரவர்க்கங்களது அரசுகளதும் நோக்கம் தற்காலிகமாக சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவாதமாக மாற்றுவது மட்டுமல்ல, அதற்கும் அப்பாலான நீண்டகால திட்டம் ஒன்று இருந்திருக்கிறது என்பது இன்றைய இலங்கையின் அரசியல் மாற்றங்கள் கூறுகின்றன.
மைத்திரிபால சிரிசேன வெற்றிபெற்ற மறுகணமே ராஜபக்ச குடும்பத்தைத் தனிமைப்படுத்தும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ராஜபக்சவின் முன்னை நாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது.
நேற்றைய பாராளுமன்ற உரையில் வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையை ஒப்புக்கொண்டுள்ள ரனில் அதற்கு இராணுவம் காரணமல்ல கொழும்பிலிருந்து உத்தரவு பிறப்பித்த அரசே காரணம் என்கிறார்.
மறுபக்கத்தில் விமல் வீரவன்ச மீதான வழக்குகள், சஜின் வாஸ் மீதான குற்றங்கள், பிள்ளையான் கைது போன்ற பல முனைகளிலிருந்து ராஜபக்ச குறிவைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ராஜபக்ச மீள முடியாத நிலை ஒன்றை எட்டியுள்ளார்.
ஐ,நா போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாகவிருந்த ராஜபக்ச இறுதியில் மூச்சுக்கூட விடவில்லை.
ஆக, மகிந்த ரஜபக்ச மிரட்டப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களை இதனூடாகக் காணலாம். பிள்ளையானிடமிருந்து அல்லது விமல் வீரவன்சவிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஊடாக அவர் மிரட்டப்பட்டிருக்கலாம்.
தவிர, ராஜபக்சவிற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் தற்செயலானது என்றும், தவிர்க்க முடியாமலே அந்த மோதல் ஏற்பட்டது என்றும், புலிகளுக்கும் ராஜபக்சவிற்கும் இடையே கொடுக்கல்வாங்கல்கள் நடைபெறும் அளவிற்கு சுமூகமான உறவு நிலவியது என்றும் ரனில் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ராஜபக்சவைத் தனிமைப்படுத்தி, அவரது கதாநாயகன் விம்பத்தை உடைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இது. அவ்வாறு ராஜபக்ச தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கொலைக்குற்றம் உட்பட ஊழல் குற்றங்களுக்காத் தண்டிக்கப்படலாம்.
போர்க்குற்ற விசாரணை நடைபெற்று முடியும் வேளையில் ராஜபக்ச ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் கையாலாகத மனிதனாக மாற்றப்பட்டிருப்பார்.
நேற்றைய பாராளுமன்ற உரையில் இலங்கை இராணுவத்தின் மீது குற்றங்கள் எதுவும் இல்லை என்றும் ராஜபக்ச அரசே குற்றவாளி என ரனில் கூறியதன் மறுபக்கத்தில் இராணுவத்தினர் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் தப்பிக்கொள்வார்கள்.
ஆக, போர்க்குற்ற விசாரணையின் முடிவு அர்த்தமற்றதாகி, தண்டனை வழங்கப்பட்டாலும் தண்டிப்பதற்கு எவரும் இல்லாத சூழல் தோன்றும்.
ஆக, புலம்பெயர் மற்றும் தமிழக இனவாதிகளின் ராஜபக்சவைத் தண்டிக்கும் நோக்கம் நிறைவேறும் மறுபக்கத்தில் சிங்கள அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக்கள் எழாத நிலை தோன்றும்.
சிங்கள அடிப்படைவாதிகள் மத்தியில் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட தியாகியாக ராஜபக்ச உருவாக மாட்டார். மாறாக திருட்டுக்காகவும், கொலைக்காகவும் தண்டனை பெற்ற கிரிமினலாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவார்.
தேவைப்பட்டால் வடக்குக் கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி வழங்கப்படலாம்.
இவை அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளை இலங்கை முழுவதும் ஏகாதிபத்தியச் சுரண்டல் திட்டமிட்டு நடத்தப்படும்.
தொழிலாளர்களின் குறைந்த பட்ச உரிமையும் அழிக்கப்பட்டுவிடும். சுன்னாகத்தில் நடைபெற்றது போன்று வடக்குக் கிழக்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாகவும், தேவைப்பட்டால் தொழில் பேட்டையாகவும் மாறிவிடும்.
கந்துவட்டி வழங்கும் ஐ.எம்.எப் உம் உலகவங்கியும் இலங்கையின் இலவசக் கல்வியையும், இலவச மருத்துவத்தையும் முற்றாக நிர்மூலமாக்கிவிடும். இலங்கை முழுவதும் அமெரிக்கக் காலனியாக மாற்றமடையும். புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் சிறிய குழுக்கள், பிரபாகரன் வாழ்கிறார், தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என அவ்வப்போது தமது பிழைப்பிற்காகக் குரலெழுப்பிக்கொண்டிருப்பார்கள்.
இலங்கையில் ஜனநாகம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். உண்மையில் சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக இடைவெளியே அது. மறுப்புறத்தில் அந்த தற்காலிக இடைவெளி ஒடுக்கப்படும் சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைக்கும் பாலமாக மாற்றப்பட வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறை தொடரும் சூழலில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமாகட்டும், இலங்கையின் விடுதலைக்கான போராட்டமாகட்டும், அழிவுகளை மட்டுப்படும் புதிய எல்லைகளை நோக்கி திட்டமிடப்படவேண்டும்.