கருணாநிதிக்கு எதிரான உணர்வலைகளை முன்வைத்து ‘ஈழத் தாய்’ ஜெயலலிதாவை உருவாக்கியவர்கள் அதே கும்பல்கள் சுமந்திரனை முன்வைத்து மற்றொரு சந்தர்ப்பவாதக் கூட்டத்தை உருவாக்க முற்படுகின்றனர்.
கருணாநிதிக்கு எதிரான அரசியல் தமிழ் நாட்டில் முற்போக்கு அணியைப் பலப்படுத்துவதற்கும், சுமந்திரனுக்கு எதிரான அரசியல் மக்கள் சார்ந்த புதிய போராட்ட அணியை உருவாக்குவதற்கும் பயன்ப்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதே.
சுமந்திரனுக்கு எதிரான அரசியல் மற்றொரு வாக்குப் பொறுக்கும் கும்பலை உருவாக்குவதற்குப் பயன்படுமானால் அது ஆபத்தானது. சுமந்திரனின் அரசியலை விமர்சிப்பது மட்டுமல்ல அவரின் அதிகாரவர்க்க சார்பு அரசியலுக்கு எதிரான புதிய அரசியலை முன்வைக வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. அதேவேளை சுமந்திரனின் அரசியலைக் காரணம் காட்டி சுமந்திரனுக்கு எந்த வகையிலும் அழுக்குக் குறையாத பிழைப்புவாதக் கும்பல்களைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து கட்டியெழுப்ப முற்பட்டால் அதற்கு எதிராகப் போராட வேண்டியதும் இன்றைய தேவை.
வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை. அதனை நடத்திய ஏகாதிபத்திய நாடுகள் அதனைப் போர்க்குற்றமாகக் குறுக்கினார்கள். பின்னர் இலங்கை அரசே சர்வதேச அனுசரணையுடன் விசாரணை நடத்தலாம் என்றார்கள். இப்போது இலங்கை அரசு மட்டுமே நடத்தலாம் என்கிறார்கள்.
இவ்வாறான போக்கை உருவாக்குவதில் சுமந்திரன் மட்டுமல்ல அவருக்கு எதிரான அணியும் செயற்பட்டது என்பதே உண்மை. இந்த இரண்டு அணிகளும் வன்னி மனிதப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளின் அடியாள் படைகள்.
தற்செயலாக சுமந்திரன் போன்றவர்களுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு அணி ஒன்று தோன்றலாம் என்ற அச்சத்தில், ஏகாதிபத்திய அணிகளாலும் உளவு நிறுவனங்களாலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளவர்களை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டவேண்டியது முற்போக்கு அணியின் கடமை.