Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரதான எதிரிகளான பாசிச சக்திகளை தோற்கடிக்கவும் : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து இந்நாட்டின் தொழிலாளர்களும் விவசாயிகளும் அடக்கப்படுகின்ற தேசிய இனங்களும் அக்கறையற்றவர்களாக இருக்க முடியாது. அதில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பேரினவாத பாசிச, நவபழைமைவாத சக்திகளையும் ரணில் தலைமையிலான நவதாராளவாத சக்திகளையும் ஒரேயடியாக சமகாலத்தில் மக்கள் தோற்கடிக்க முடியாததால், அவற்றில் தற்காலத்தில் ஒப்பீட்டளவில் பிரதான எதிரியாக இருக்கும் மஹிந்த தலைமையிலான பேரினவாத, பாசிச நவபழைமைவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்காக மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். அத்துடன் தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தவர்கள் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், நாட்டு மக்களின் ஐக்கியத்திற்கு பாதிப்பாக இருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் தேவையான ஜனநாயக இடைவெளியை வென்றெடுக்கவும், பாதுகாக்கவும் மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் 2015ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியின் இடையேற்பாட்டுக் குழுவின் இணை அழைப்பாளர்களான டபிள்யூ.சோமரட்ண, இ.தம்பையா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பின் காலனித்துவ காலத்திலிருந்து இலங்கையில் இருந்துவந்த குறைந்த பட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தையும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்கியது. அந்த ஜனநாயகமும் இல்லாத சூழலில் அவரின் மீது அதிருப்தியடைந்தவர்களாலோ, அவருக்கு பதிலாக ஆட்சியை கைப்பற்ற எண்ணம் கொண்டிருந்தவர்களாலோ அவரை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படவும் காணாமல் போகவும் லட்சக்கணக்கானோர் அகதிகளாகவும் காரணமான யுத்தத்தை அவர் ஈவிரக்கமின்றி நடத்தினார். அரசியல் பழிவாங்கல் உச்சமாகியதுடன் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயினர். அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். போதைப்பொருள் போன்ற சமூக விரோத வர்த்தகங்கள் பல்கிப் பெருகின. ஆட்சியாளர்கள் அவற்றில் சம்மந்தப்பட்டிருந்தனர். சட்டத்துறை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறையிலும் பாசிசம் மேலோங்கியது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரம் கட்டப்பட்டனர்.

இந்நிலையிலேயே பின் காலனித்துவ முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்க விரும்பிய சோபி தேரர் போன்றவர்களும் ரணில் போன்ற நவதாராளவாதிகளும் விரும்பிய படி மக்களின் வாக்குகளினூடாக மேற்படி அழிவுகளுக்கு காரணமான மஹிந்த ஜனவாரி 8ம் திகதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு நாட்டின் பிரதமராகும் எண்ணத்தில் தேர்தலில் சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணியிலும் பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு அவரின் பேரினவாதம் மட்டும் கைகொடுதத்து என கூறமுடியாது. ஊழல் மோசடியூடாக சம்பாதித்து கொண்டுள்ள பணம், மாபியா பணக்காரர்கள், சர்வதேச தேசிய மாபிய வலைப்பின்னல்கள் போன்றனவும், சீரழிந்த ஆபிரிக்க சர்வதிகார நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பியா தவிர்ந்த சீனா போன்ற ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளும் அவருக்கு கைகொடுக்கின்றன. இது முறைசார்பற்ற ஜனநாயக விரோத உலக ஒழுங்கின் இன்னொரு போக்கு. இது முறைசார் நவதாராளவாத உலக ஒழுங்கை விடவும் அபாயமானது. இதிலிருந்து இலங்கை நாடும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான முதல் நடவடிக்கை பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவையும் அவரது அணியையும் தோற்கடிப்பதாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் சாராதன மக்களை மேலும் சுரண்டலுக்குள்ளாக்கும் உற்பத்தி முறையிலிருந்து அந்நியப்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் பொருளாதாரத்தை ஏகபோகமாக ஒப்படைக்கும் நவதாராளவாத பொருளாதார கொள்கையை ஐ.தே.கட்சியும், ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்படி நடக்கும் முதலாளித்துவ கட்சிகளாகும்.

மஹிந்த தலைமையிலான அணி பேரினவாத, பாசிச, நவபழைமவாத நிலைப்பாடு காரணமாக பழைய முதலாளித்து ஜனநாயகத்தை மட்டமன்றி நவதாராளவாத ஜனநாயகத்தையும் மறுத்து வருகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு குறைந்த பட்ச அரசியல் தீர்விற்கு கூட தயாராக இல்லை. இதன் காரணமாக அமெரிக்கா தலைமையிலான பிரத்தியேக நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுடன் முரண்பாடுகளை கொண்டுள்ளதுடன் அதனை சமநிலைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு சீனா போன்ற ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருங்கி உறவாடுகிறது.

ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சி அமெரிக்கா தலைமையிலான நவதாராளவாத நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டு செயற்படுவதுடன், அந்நிகழ்ச்சி நிரலுக்கு பங்கமில்லாத வகையிலேயே ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவை பேணுகிறது. ஆனால் ரணில் தலைமையிலான அணி நல்லாட்சி, மனித உரிமைகள், ஊழல், மோசடி எதிர்ப்பு போன்ற நவதாராளவாத ஜனநாயக அம்சங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியது. மஹிந்த அணி இனவாதத்தையே பிரதானமாக கொண்டு தேர்தல் பிரசாரங்களை செய்வதால் அதனை எதிர்கொள்வதில் ஐ.தே. கட்சி அணி பாரிய சவால்களை எதிர்கொள்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கு மாற்று அரசியல் விஞ்ஞான பூர்வமான சோஷலிஸமாவது போன்று அவற்றை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றும் கற்பனவாதத்தினாலன்றி விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைகளினாலேயே சாத்தியமாகும். தற்போதைய சூழலில் அந்நடவடிக்கைகள் படிமுறைகளை கொண்டதாகும். அவற்றில் ஒன்றாக எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவின் மக்கள் விரோத கருத்தியலும், நடைமுறைகளும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மக்களின் அக்கறைகளுக்கு எதிரான இந்த இரண்டு அணிகளுக்கும் மாற்றாக பாராளுமன்றத் தேர்தல் களத்திலோ அதற்கு வெளியிலோ சரியான வேலைத்திட்டத்துடனான பலமான ஒரு இடதுசாரி கட்சியையோ, அல்லது இயக்கத்தையோ காண முடியவில்லை. அந்த இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் மக்களுக்கு மஹிந்த அணியை தோற்கடிக்க வேண்டியது உடனடி அரசியல் கடமையாக இருப்பதால், ரணில் அணி முன்நிறுத்தப்படுவதும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டியதுமாகிறது.

எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பேரினவாத, பாசிச, நவபழமைவாதம் தோற்கடிக்கப்பட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அடக்கப்படும் தேசிய இனங்களும், பிரிவினர்களும் ஐக்கியப்பட்டு புதிய அரசியல் பண்பாட்டை நிலைநாட்ட தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படக் கூடிய சூழலை உருவாக்க சரியான முடிவை எடுத்து செயற்பட யேண்டும். அடக்கப்படும் தேசிய இனங்கள் நாடளாவிய ரீதியில் பேரினவாத பாசிச நவபழைழமவாதத்தை தோற்கடிக்கவும் நியாயமான அரசியல் தீர்வை வென்றெடுக்க குறிப்பாகவும் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

Exit mobile version