இலங்கையில் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜானதிபதி தேர்தலுக்குத் தயார்படுத்துவதில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி முனைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளது. இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக மக்கள் புதிய ஆட்சி ஒன்றை எதிர்பார்த்திருந்தனர்.
தோற்றுப்போன பாராளுமன்ற ஜனநாயகத்தின் புதிய காவலராக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் பின்பலத்தோடு வந்திறங்கியவர் தான் மைத்திரிபால சிரிசேன.
இவர் ரனில் விக்ரமசிங்க வோடு இணைந்து நடத்திய ஆட்சியில் இலங்கையில் எஞ்சியிருந்த சமூக நலத்திட்டங்களான இலவசக்கல்வி, மருத்துவம், மானிய அமைப்பு முறைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. வறுமைக்கோட்டிற்குக் கீழான மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியது. மீண்டும் வெறுப்பிற்கு உள்ளான மக்கள் மீண்டும் புதிய முகத்தை தேடும் நிலை தோன்றியுள்ளது.
அதற்காக அமெரிக்க ஆதரவுடன் வந்திறங்கியவர் தான் கோத்தாபய ராஜபக்ச என்ற அமெரிக்க உளவாளி. இனப்படுகொலையை நடத்துவதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ச இன்று மீண்டும் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.
அதன் பின்னணியில் இன்றைய அரசினுள் மோதல்கள் உச்சமடைந்துள்ளன.
நூறு நாட்களில் ஊழலை இல்லாமாலாக்குவோம் என ஆட்சிக்கு வந்த அரசு மக்களை ஏமாற்றியது. இன்று நூறு நாள் வேலைத்திட்டம் தவறானது என்று இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறுவதன் ஊடாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அவரது ஆட்சியில் முன்னெடுக்கப்படவில்லை என ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.
பௌத்த துறவி ஒருவரின் பிறந்த நாள் வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி நூறு நாள் வேலைத்திட்டம் முட்டாளதனமானது எனத் தெரிவித்துள்ளார்.