கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது பேரினவாதிகள் எதிரியல்ல என்ற நிலைமை வந்தாயிற்று. மக்களை வெம்மைப்படுத்தி வாக்குத் திரட்டும் உக்தியை கஜேந்திரகுமார் கையாள்கிறார். இதன் பின் விளைவுகள், அழிவுகள் என்ற எதையுமே எண்ணிப்பார்க்காத கஜேந்திரகுமார் குழு பதைபதைப்பதைப் போன்று தெரிகிறது, சாமானிய மக்கள் கூட விளங்கிக்கொள்ளக் கூடிய அளவிற்கு பொது இடங்களில் கஜேந்திரகுமார் குழுவின் பதைபதைப்பு வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள அவர் கையாண்ட முறைகள் வெற்றியளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
புலம்பெயர் நாடுகளில் சில அமைப்புக்கள் இன்னும் கஜேந்திரகுமாரை வெற்றிபெறச் செய்வதற்காகப் பணம் திரட்டுகின்றன. கனடாவில் பல்வேறு வியாபார நிறுவனங்களிடம் இப் பணம் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பெரும் பணச் செலவில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் மத்தியில் கஜேந்திரகுமார் தோல்வியடைந்தால் பொன்னம்பலம் குடும்ப அரசியலின் இறுதிக்கட்டமாக அமைந்துவிடும் என்பதே பதைபதைப்பதற்குக் காரணம்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை அரசியலை மௌனிப்பதற்கு முன்னர் நடத்தப்படும் இறுதி யுத்தமே இது.
தவிரவும், புலம்பெயர் நாடுகளில் தேர்தலோடு மீண்ட தமிழ்த் தேசிய வியாபாரம் மீண்டும் தலையெடுக்க முடியாத அளவிற்கு பலவீனமடைந்துவிடும்.
எதிர்வரும் ஐந்துவருடங்களுக்கு தம்மை யார் ஏமாற்றப் போகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்கும் ஜனநாயகமே தேர்தல்.
இம் முறை மக்களை ஏமாற்ற கஜேந்திரகுமாருக்குச் சந்தர்ப்பம் கிடைக்காவிடில், அவரின் அரசியல் மறைவு ஆரம்பிக்கும். புலம்பெயர் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஆட்டம்காண ஆரம்பிப்பர். இவ்வாறான ஒரு இறுதிச் சுத்திகரிப்பிற்காகவே திட்டமிட்டுக் கஜேந்திரகுமார் களமிறக்கப்பட்டாரா என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன.
இவ்வாறான சூழலில் தேர்தலைப் புறக்கணிப்பதே கஜேந்திரகுமாரும் சம்பந்தனும் வரித்துக்கொண்டுள்ள ஒற்றையாட்சிப் பாராளுமன்ற வழிமுறைக்கு எதிராக மக்கள் வெளிக்காட்டும் எதிர்பாக அமையும்.
நிவேதா.