தற்கொலை செய்து கொண்ட கோப்பாய் வடக்கைச் சேர்ந்த சிறுவனுக்கு 18 வயது. கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் செந்தூரன் அரசியலில் ஆர்வமற்றவர் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் தேசிய இன முரண்பாடே இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கை அரசு எந்த முடிவை எடுப்பதானாலும், பேரினவாதிகளுக்கு அஞ்சியோ அல்லது பேரினவாதத்தின் ஆளுமைக்கு உட்படோ தான் செயற்பட வேண்டிய நிலையிலுள்ளது.
இலங்கையில் எழுதப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திலிருந்து இன்று வரைக்கும் படுகொலைகளின் ஆரம்பமே பேரினவாதத்தால் ஆட்கொள்ளப்படுவதிலிருந்தே ஆரம்பிக்கிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமை உறுதி செய்யப்படும் வரைக்கும் இலங்கையில் ஒடுக்குமுறை தொடரும். சுய நிர்ணைய உரிமையை யாசித்துப் பெற்றுவிட முடியாது. போராடி மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு போராட்டத்தின் திசை வழி வெறுமனே உணர்ச்சிகளிலிருந்து ஆரம்பிக்க முடியாது, அது உணர்வு பூர்வமான அர்ப்பணிப்பின் ஊடாக ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டிப் போராடும் புரட்சிகர இயங்களின் ஊடாக மட்டுமே வளர்த்தெடுக்கப்பட முடியும்.
கடந்த காலத்தின் குற்றவாளிகளும், பயங்கரக் கொலையாளிகளும், வியாபாரிகளும், மக்களின் சொத்துக்களைச் சூறையாடியவர்களும் அவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே உள்ளனர். உணர்ச்சிவசப்படுத்தி மக்களைத் தமது இனவாத ஆளுமைக்குள் அடைத்து வைத்திருப்பதே அவர்களின் ஒரே நோக்கம்.
செந்தூரன் போன்றவர்களில் உணர்வுகளும் தியாகமும் அர்ப்பணமும் போராட்டம் ஒன்று படிமுறையில் வளர்வதற்குப் பதிலாக இவ்வாறான வியாபாரிகளுக்கு தீனி போடுவதற்கே பயன்படும்.
இனக்கொலை அரச அதிகாரத்தால் வன்னியில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட போது பெருமூச்சுக் கூடக் கேட்காத யாழ்ப்பாணத்தில் திடீர் தற்கொலையின் பின்னணி என்ன?, நேற்று வரைக்கும் அரசியலோடு தொடர்பற்ற செந்தூரனின் சிறிய துண்டுக்கடதாசியின் வலிமை மற்றும் உண்மை என்ன?. என்ற கேள்விகள் தொக்கு நிக்க, இவ்வாறான போராட்டங்கள் பிழைப்புவாதிகளுக்கே பயன்படும் என்ற அரசியல் சொல்லப்பட வேண்டும்.
பேரினவாத பாசிச இலங்கை அரசிற்கு எதிரான அரசியல் பலம் மிக்க அணி ஒன்றைக் கட்டியமைபதற்கான அரசியலே இன்று எமக்கு முன்னால் உள்ள தேவை.